gaza strip file image
உலகம்

‘உயிர் காக்கும் உதவிகளை செய்வது அடிப்படை.. வரலாறு நம்மை கவனித்துக்கொண்டு இருக்கிறது’ - ஐநா அறிக்கை

யுவபுருஷ்

ஒருசில நிமிடங்களில் 5,000 ஏவுகணை ஏவி இஸ்ரேலை கடந்த 7ம் தேதி அதிரவைத்தது ஹமாஸ். ஆனால், அதுமுதல் போர் என்ற போர்வையை போர்த்திக்கொண்டு காஸாவை உருக்குலைத்து வருகிறது இஸ்ரேல். இதுவரை நடந்த தாக்குதலில் சுமார் 7,500 காஸா மக்கள் பலியாகியுள்ளனர். இதுபோக தற்போது காஸாவில் இணையம், தொலை தொடர்பு சேவைகள் முற்றிலுமாக அறுபட்டுள்ளது, அப்பகுதியையே இருளில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில், காஸாவுக்கு ஐக்கிய நாடுகள் சபையால் வழங்கப்படும் உதவிகளை சரியாக கொண்டு சேர்க்க முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, ஐநா பொதுச்செயலாளர் வெளியிட்ட அறிக்கையில், “இஸ்ரேலின் தாக்குதலால் காஸாவில் இருக்கும் சுமார் 20 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு நடத்தப்பட்டு வரும் தாக்குதல்கள் இதுவரை காஸா கண்டிராத பேரழிவை நிகழ்த்தி வருகிறது.

போருக்கு முன்பான காலங்களில் காஸாவுக்குள் தினசரி சுமார் 500 டிரக்குகள் சென்று வந்தன. ஆனால், தற்போது வெறும் 12 டிரக்குகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. மருத்துவ உதவி, உணவு உற்பத்தி, குடிநீர் விநியோகம் என்று அனைத்துக்கும் ஆடிநாதமாக விளங்கும் எரிபொருளையும் காஸாவுக்கு கொடுக்க முடியவில்லை.

காஸா எல்லையில் இஸ்ரேலின் கடுமையான கட்டுப்பாடுகளால், காஸாவுக்கு எந்த உதவியையும் செய்ய முடியவில்லை. காஸா மக்களின் அடிப்படை தேவையை நிவர்த்தி செய்ய வேண்டியது நமது கடமை. உயிர் காக்கும் மருந்துகள், உணவு, தண்ணீர், எரிபொருட்கள் போன்றவை சரியான நேரத்திற்கு அவர்களுக்கு கிடைக்க வேண்டும். சோதனை என்ற பெயரில் பல மணி நேரம் எல்லைகளில் காக்க வைக்கப்படக்கூடாது.

ஒவ்வொரு நிமிடமும் பேரழிவு நடந்து வரும் சூழலில், காஸா மக்கள் பெரும் துயரை எதிர்கொண்டு வருகின்றனர். எல்லோரும் தங்களுக்கான பொறுப்புணர்ச்சியை புரிந்துகொள்ள வேண்டும். வரலாறு நம்மை கவனித்துக்கொண்டுதான் இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.