உலகம்

"உலகில் ஐந்தில் ஒருவர் பட்டினியில் வீழும் அபாயம்" - ஐநா கவலை

Sinekadhara

‌‌உக்ரைன் போர் எதிரொலியாக உலக மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் வறுமையிலும் பட்டினியிலும் தவிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஐநா கவலை தெரிவித்துள்ளது.

செக் குடியரசு பத்திரிகை ஒன்றுக்கு ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் பேட்டி அளித்தார். உக்ரைனில் போர் நடந்து கொண்டிருந்தாலும் அது உலகெங்கும் பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார். குறிப்பாக வளரும் நாடுகளே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக குட்டரஸ் தெரிவித்தார். உலகின் கோதுமை மற்றும் பார்லி தேவையில் 30 சதவிகிதத்தையும் சோள தேவையில் 20 சதவிகிதத்தையும் சூரியகாந்தி எண்ணெயில் 50 சதவிகிதத்தையும் உக்ரைனும் ரஷ்யாவும் மட்டுமே பூர்த்தி செய்து வந்ததாகவும், ஆனால் அது இப்போது தடைபட்டுள்ளதாகவும் குட்டரஸ் தெரிவித்தார்.

கச்சா எண்ணெய் விலை 60% வரை அதிகரித்துள்ள நிலையில் எரிவாயு, உரங்கள் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளதாக ஐநா பொதுச் செயலாளர் தெரிவித்தார். இதனால் 170 கோடி பேர், அதாவது உலக மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் வறுமையிலும் பட்டினியிலும் தள்ளப்படும் சூழல் எழுந்துள்ளதாக ஐநா பொதுச்செயலாளர் கூறினார். இதுபோன்ற சூழலில் பணக்காரர்கள் சொத்து மதிப்பு மேலும் பெருகி ஏழைகள் மேலும் வறுமையில் வீழ்வதை தடுக்க ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும் என்றும் அவர் கூறினார்.