இங்கிலாந்து நாட்டின் கிளாஸ்கோ நகரில் ஐக்கிய நாடுகள் அவையின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடு கடந்த அக்டோபர் 31 முதல் நடைபெற்று வருகிறது. சுமார் 200 நாடுகளில் 24 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த மாநாட்டில் காணொளி மூலமாக பேசியுள்ளார் பசிஃபிக் பெருங்கடலின் தீவு நாடான துவாலுவின் (Tuvalu) வெளியுறவு துறை அமைச்சர் சைமன் கோஃப். காலநிலை மாற்றத்தால் தங்கள் நாடு எதிர்கொண்டு வரும் சூழலை உலகத்திற்கு எடுத்து சொல்லும் விதமாக முழங்கால் அளவு ஆழம் கொண்ட கடல் நீரில் நின்றபடி பேசி தனது வீடியோவை இந்த மாநாட்டில் பகிர்ந்துள்ளார்.
இதன் மூலம் தங்கள் நாடு காலநிலை மாற்றத்தை எதிர்கொண்டு வரும் முதன்மையான நாடுகளில் ஒன்றாக இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்காக கடல் நீரில் போடியம், மைக், தங்கள் நாட்டின் கொடி மாதிரியானவற்றை பொருத்திய அவர் கோட் சூட், டை அணிந்துள்ளார். அதோடு கால்சட்டையை மடித்துவிட்ட படி வீடியோவில் பேசுகிறார். உயர்ந்து வரும் கடல் நீர் மட்டத்தால் தங்கள் நாடு சந்தித்து வரும் நிலையை அவர் இதில் குறிப்பிட்டுள்ளார். இதையே தனது அறிக்கையாக COP26-இல் சமர்பித்துள்ளார் அவர். சமூக வலைத்தளங்களில் இது வைரலாக பரவி வருகிறது.