பிரிட்டனில் மிகவும் கோடீஸ்வரர் குடும்பத்தைக் கொண்டது ஹிந்துஜா குடும்பம். இந்த குடும்பத்தில் பிரகாஷ் ஹிந்துஜா, அவரது மனைவி கமல், அவர்களது மகன் அஜய் மற்றும் அவரது மனைவி நம்ரதா ஆகிய நான்கு பேர் உள்ளனர். ஹிந்துஜா குடும்பம், 20 பில்லியன் டாலர் மதிப்பிலான நிகர மதிப்புடன் இந்தியாவின் பணக்காரர்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. லண்டனில் ரியல் எஸ்டேட் தவிர, கப்பல் போக்குவரத்து, வங்கி, ஊடகம் மற்றும் பிற தொழில்களில் ஆர்வமுள்ள இந்துஜா குழுமம், பன்னாட்டு நிறுவனத்தை கட்டுப்படுத்துகிறது.
இந்த குடும்பத்தினர் ஸ்விட்சர்லாந்தில் உள்ள வில்லாவில், வீட்டுப் பணியாளர்களை துன்புறுத்தியதாகவும் தவறாக நடத்தியதாகவும் மனிதக் கடத்தல் வழக்கு நடைபெற்று வருகிறது. குறைந்த ஊதியம், அதிக பணி நேரம் என்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக வீட்டுப் பணியாளர்கள் சார்பில் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதன் விசாரணை கடந்த ஜூன் 17ஆம் தேதி மீண்டும் தொடங்கியது.
இந்த வழக்கின்போது, ”இந்தியாவைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு, அவர்கள் வீட்டில் வளர்க்கும் நாய்க்குச் செலவிடும் தொகையைக் காட்டிலும் மிகக் குறைவான ஊதியமே வழங்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 8 டாலர் (ரூ.667) மட்டுமே ஊதியமாக வழங்கப்பட்டுள்ளது. ஆனால், ஒருநாள் வேலை என்பது 15 முதல் 18 மணி நேரம்வரை இருக்கும். மேலும், பாஸ்போர்ட்டை ஹிந்துஜா குடும்பத்தினர் வைத்துள்ளனர்” என எதிர்தரப்பு வழக்கறிஞர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து வழக்குரைஞர், ”ஹிந்துஜா குடும்பத்தினர், நாள் ஒன்றுக்கு சுவிஸ் பிரான்ங்ஸில் அதிகபட்சம் 8 டாலர் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், இவர்களது வளர்ப்பு நாய்க்கு ஆண்டுக்கு 8,584 பிரான்ங்ஸ் செலவிட்டுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.
இவ்வழக்கில் ஹிந்துஜா தரப்பு வழக்கறிஞர், “இந்த வழக்கில், அவர்களுக்கு ஊதியம் தவிர, தங்கும் இடம், உணவு உள்ளிட்டவையும், ஹிந்துஜா குடும்பத்தினரால் கொடுக்கப்பட்டது. இதைத் தாண்டி ஊதியம் வழங்கப்பட்டிருக்கிறது. ஊதியத்தை மட்டும் இங்கு கணக்கிடக் கூடாது” என வாதம் வைத்திருந்தார். இந்த குற்றச்சாட்டின் கீழ், நால்வருக்கும் சிறைத் தண்டனை விதிக்க வேண்டும் என எதிர்தரப்பு வழக்குரைஞர் வாதிட, வீட்டுப் பணியாளர்களை நியமிப்பது, அவர்களது வேலை, ஊதியம் போன்றவற்றை, ஹிந்துஜா குடும்பத்தினர் நேரடியாக கவனிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஹிந்துஜா குடும்பத்தினர் மறுத்துள்ளபோதிலும், இந்த வழக்கில், ஹிந்துஜா குடும்பத்தினர் ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனையை எதிர்நோக்கியிருக்கிறார்கள்.