உக்ரைன் போர் பதற்றதால் சூரியகாந்தி எண்ணெய் விலை கடுமையாக உயரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. ஒன்றரை மதத்திற்கு தேவையான எண்ணெய் மட்டுமே கையிருப்பில் உள்ளதால் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளதாக வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் 75 சதவீத சூரியகாந்தி எண்ணெய் தேவையை பூர்த்தி செய்கிறது உக்ரைன். தற்பொழுது உக்ரைன் - ரஷ்யாவிடையே போர் பதட்டம் அதிகரித்து வரும் நிலையில் சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகம் உள்ளிட்ட, இந்தியா முழுவதும் அத்தியாவசிய தேவையான சூரியகாந்தி எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
உக்ரைன் நாட்டில் நிலவும் பதட்டம் காரணமாக சூரியகாந்தி எண்ணெய் விலை தற்பொழுது முதலே அதிகரிக்க துவங்கிவிட்டதாகவும் நேற்றுவரை 152 ரூபாயாக இருந்த 1 லிட்டர் சூரியகாந்தி எண்ணெய் விலை ஒரே நாளில் 10 ரூபாய் அதிகரித்து 162 ரூபாயாக உயர்ந்துள்ளதாக கூறும் எண்ணெய் விற்பனையாளர்கள் இறக்குமதி பாதிக்கப்பட்டால் கடும் விலையேற்றம் இருக்கும் எனவும் எச்சரிக்கின்றனர்.
தொடர்ந்து சூரியகாந்தி எண்ணெய்க்கான தட்டுப்பாடு ஏற்படும் பட்சத்தில் மக்கள் நல்லெண்ணெய், கடலை எண்ணெய்க்கு மாற வாய்ப்பு உள்ளதாகவும், அவ்வாறு கடலை எண்ணெய், நல்லெண்ணெய் தேவை அதிகரிக்கும் பட்சத்தில் அவற்றின் விலையும் கணிசமாக உயர வாய்ப்புள்ளதாகவும் கூறுகிறார்கள். இதுபோன்ற இக்கட்டான சூழலில் உள்நாட்டு எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க அரசு வழிவகை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றனர்.
மக்களின் அன்றாட அத்தியாவசிய தேவையாக இருப்பதன் காரணமாக இதன் விலை உயர்வு ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.