உலகம்

’ஈஃபிள் டவர் மீது திடீர் ஏவுகணை தாக்குதல்?’ - உக்ரைன் வெளியிட்ட வீடியோவால் அதிர்ச்சி

’ஈஃபிள் டவர் மீது திடீர் ஏவுகணை தாக்குதல்?’ - உக்ரைன் வெளியிட்ட வீடியோவால் அதிர்ச்சி

ஜா. ஜாக்சன் சிங்

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள புகழ்பெற்ற ஈஃபிள் டவர் மீது ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்படுவது போன்ற வீடியோவை உக்ரைன் அரசு வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சகம் சார்பில் ட்விட்டரில் இன்று ஒரு வீடியோ வெளியிடப்பட்டது. அதில், பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள ஈஃபிள் டவர் முன்பு ஒரு பெண் புகைப்படத்துக்கு போஸ் கொடுத்துக் கொண்டிருக்கிறார். ஆனால், சில நொடிகளிலேயே அந்தப் பகுதியில் பயங்கர ஏவுகணை தாக்குதல் நடத்தப்படுகிறது. இதில் ஈஃபிள் டவர் உட்பட அங்கிருந்த கட்டிடங்கள் விழுந்து நொறுங்குகின்றன. அங்குள்ள மக்கள் உயிருக்கு பயந்து நாலாபுறமும் சிதறி ஓடுகிறார்கள். அப்போது வீடியோவுக்கு மேலே, சில ஆங்கில வார்த்தைகள் தோன்றுகின்றன.

"இன்னொரு ஐரோப்பிய நாட்டின் தலைநகருக்கு இந்த நிலைமை ஏற்படுவதை எண்ணிப் பாருங்கள். இவ்வாறு நடந்துவிட கூடாது என்று தான் நாங்களும் நினைக்கிறோம். உக்ரைன் வான் எல்லைகளை மூடுவதாக அறிவியுங்கள். இல்லையெனில், உக்ரைனுக்கு வான் போர் வீரர்களை அனுப்பி வையுங்கள். நாங்கள் வீழ்ந்தால் நீங்களும் வீழ்ந்ததாகவே அர்த்தம்" என அதில் எழுதப்பட்டுள்ளன. இது, கடந்த வாரம் ஐரோப்பிய நாடுகளிடம் உக்ரைன் அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கி கூறிய வார்த்தைகள் ஆகும்.

நிலைமையின் தீவிரத்தை உணர்த்துவதற்காக இந்த கிராஃபிக்ஸ் வீடியோவை உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சகம் டிவிட்டரில் வெளியிட்டுள்ளது.

முன்னதாக, உக்ரைன் போர் தொடங்கியது முதல், தங்களுக்கு உதவ வருமாறு ஐரோப்பிய யூனியன் நாடுகளிடமும், நேட்டோ நாடுகளிடமும் உக்ரைன் அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்து வருகிறார். ஆனால், உக்ரைனுக்கு நேரடியாக உதவுவதற்கு மேற்குறிப்பிட்ட கூட்டமைப்புகளில் இருந்து எந்த நாடும் முன்வரவில்லை. சில அறிவிப்புகளை மட்டுமே வெளியிட்டன. இதனால் தன்னந்தனியாக ரஷ்ய ராணுவத்தை எதிர்கொள்ளும் நிலைக்கு உக்ரைன் தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.