உக்ரைன் அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கி கார் விபத்தில் சிக்கியதாகவும் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. செலன்ஸ்கியின் செய்தித் தொடர்பாளரும் இந்தத் தகவலை தனது முகநூலில் பதிவிட்டு உறுதிபடுத்தியுள்ளார்.
அதிபர் செலன்ஸ்கியின் கார் மற்றும் பாதுகாப்பு வாகனம் மீது மற்றொரு கார் மோதி விபத்து நேரிட்டதாக, 'கிவ் இன்டிபெண்டன்ட்' என்ற ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அதிபருடன் சென்ற மருத்துவர்கள் அவரைப் பரிசோதித்ததாகவும், செலன்ஸ்கிக்கு லேசான காயமே ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தின் அனைத்து சூழ்நிலைகளையும் சட்ட அமலாக்க அதிகாரிகள் விசாரிப்பார்கள் என்று செலன்ஸ்கியின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். உக்ரைனில் ரஷ்யா தாக்குதல் நடத்திவரும் நிலையில் அதிபர் செலன்ஸ்கி கார் விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பெலாரஸ் எல்லையில் உக்ரைன் ராணுவ வீரர்கள் தீவிர போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். உக்ரைனின் பல்வேறு பகுதிகளில் பிரிந்து தாக்குதல் நடத்தப்பட்டதால், ரஷ்ய படைகளுக்கு பின்னடைவு ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து கிழக்கு உக்ரைனில் இருந்து படைகளை திரும்ப பெற முடிவெடுத்திருக்கும் ரஷ்யா, டொனட்ஸ்க் பகுதியில் சண்டையை தீவிரப்படுத்த முடிவு எடுத்துள்ளது. இந்தச் சூழலில், ரஷ்ய படைகளுக்கு தக்க பதிலடி தரும் வகையில் உக்ரைன் - பெலாரஸ் எல்லைப் பகுதியில், உக்ரைன் ராணுவ வீரர்கள் தீவிர போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.