ஜெலன்ஸ்கி, ட்ரம்ப் எக்ஸ் தளம்
உலகம்

“ட்ரம்பால் போர் நிறுத்தம் உறுதி” - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நம்பிக்கை!

அமெரிக்க அதிபராகப் பதவியேற்கவுள்ள டொனால்ட் ட்ரம்ப், விரைவில் உக்ரைனில் போர் நிறுத்தத்தை மேற்கொள்வார் என உக்ரைன் அதிபர் விளாம்டிர் ஜெலன்ஸ்கி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Prakash J

“போரை நிறுத்துவேன்” - ட்ரம்ப் உறுதி

நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக்கூடாது என்பதற்காக, அதன் அண்டை நாடான ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி முதல் அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் நிதி உதவி மற்றும் ஆயுத உதவி அளித்து வருவதால், உக்ரைனும் ரஷ்யாவுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதன் காரணமாக இவ்விரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் போர், இரண்டு ஆண்டுகளைக் கடந்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, ரஷ்யாவுக்கு அதன் நட்பு நாடான வடகொரியா ஏவுகணை மற்றும் அணு ஆயுத உதவியை வழங்கி வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இதையடுத்து,

“இது போரை தீவிரப்படுத்தும் செயல்; இதனால், போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியில் பலன் ஏற்படாது”
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

தெரிவித்திருந்தார். இந்தச் சூழலில், அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தல் மாற்றம் காரணமாக, விரைவில் இந்த இரு நாடுகளுக்கு இடையே போர் நிறுத்தம் ஏற்படலாம் என்ற பேச்சும் உலா வருகிறது. அடுத்த அதிபராகப் பதவியேற்கவுள்ள ட்ரம்ப், போர் நிறுத்தம் ஏற்படுவதற்கான வழிமுறைகளைக் கையாளுவேன் என உறுதியளித்திருந்தார். இதுதொடர்பாக அவர், “அவர்கள் போரை தொடங்குவேன் என கூறினார்கள்; நான் போரை நிறுத்துவேன். போரை நடத்துவதைவிட நிறுத்துவதில்தான் ஜனநாயகமும், சுதந்திரமும் உள்ளது” எனத் தெரிவித்திருந்தார்.

ரஷ்யா - உக்ரைன் போர்

ஒருவேளை, ரஷ்யா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் போரை நிறுத்துவதற்கு ஒப்புக்கொள்ள மறுத்தால், அமெரிக்காவின் ட்ரம்பின் புதிய அரசோ, உக்ரைன் மற்றும் இஸ்ரேலுக்கு அளித்துவரும் நிதியையும் ஆயுதங்களையும் நிறுத்தும் எனக் கூறப்படுகிறது. ஏனெனில் ட்ரம்ப், அமெரிக்க ராணுவத்தைப் பலப்படுத்துவதிலேயே குறியாக இருக்கிறார். இதனால் அந்நாடுகளின் பலம் குறையும் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: இலங்கை: தமிழர்களின் வாக்குகளை கைப்பற்றி சாதித்த ஆளும்கட்சி.. சாத்தியமானது எப்படி? வைகோ கடும் கண்டனம்

துருக்கி மற்றும் ஹங்கேரி நாடுகளுக்குப் பிறகு உக்ரைன் அதிபரும் நம்பிக்கை

இந்த நிலையில்தான், “டொனால்டு ட்ரம்பின் அமெரிக்க நிர்வாகமானது, தீர்வு அடிப்படையிலான அணுகுமுறையை எடுத்தால் உக்ரைனில் போர் எளிதில் முடிவுக்கு வரும்” என துருக்கி நாட்டு அதிபர் தையிப் எர்டோகன் தெரிவித்திருந்தார்.

இதேகருத்தை ஹங்கேரி பிரதமர் விக்டர் ஓர்பனும் தெரிவித்திருந்தார். அவர், ”அமெரிக்கர்கள் இந்தப் போரை விட்டுவிடுவார்கள், முதலில் அவர்கள் போரை ஊக்குவிக்க மாட்டார்கள். ஐரோப்பா மட்டும் இந்தப் போருக்கு நிதியளிக்க முடியாது மற்றும் போர் குறித்து அமைதியாக இருப்பவர்கள் புதிய சூழ்நிலைக்கு மாறுவர்” எனத் தெரிவித்துள்ளார்.

இவர்களைத் தொடர்ந்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும், ட்ரம்பின் தலைமையால் போர் முடிவுக்கு வரும் எனத் தெரிவித்துள்ளார். இதுகுறித்த பேட்டியொன்றில் அவர், “எங்களுடைய நிலைப்பாட்டை பற்றி ட்ரம்ப் கேட்டறிந்தார். ட்ரம்பின் தலைமையின்கீழ், போரானது விரைவில் முடிவுக்கு வரும். ட்ரம்பின் நிர்வாகம், விரைவான தீர்வு காண்பதில் முன்னுரிமை அளிப்போம் என உறுதி கூறியுள்ளது. அமைதி வேண்டும் என்பதே எங்களுக்கு மிக முக்கியம். இதனால், எங்கள் மீது திணிக்கப்பட்ட அநீதியால், எங்களுடைய குடிமக்களை இழந்துவருகிறோம் என்ற உணர்வு ஏற்படாது. போர் முடிவுக்கு வரும். ஆனால், அதற்கான சரியான தேதியை கூற முடியாது. வெள்ளை மாளிகையை தலைமையேற்று நடத்தவுள்ள நிர்வாகத்தின் கொள்கைகள் நிச்சயம் போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வரும்” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க; இலங்கை நாடாளுமன்ற தேர்தல்: வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்த ஆளும்கட்சி.. ராஜபக்சே கட்சியுடன் ஒப்பீடு!