உலகம்

ஐரோப்பியாவின் மிகப்பெரிய அணு உலை - அதிரடி தாக்குதலை நடத்திய ரஷ்யா

ஐரோப்பியாவின் மிகப்பெரிய அணு உலை - அதிரடி தாக்குதலை நடத்திய ரஷ்யா

ஜா. ஜாக்சன் சிங்

உக்ரைனில் உள்ள ஐரோப்பியாவின் மிகப்பெரிய அணு உலை மீது ரஷ்யா அதிரடியாக தாக்குதல் நடத்தி அதனை கைப்பற்றியுள்ளது. அணு உலை மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால் அங்கு கதிர்வீச்சு அளவு அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உக்ரைனின் தென்கிழக்கு பகுதியில் உள்ள ஜப்போரிஜியா நகரில் அணு உலை ஒன்று அமைந்துள்ளது. இதுதான் ஐரோப்பியாவிலேயே மிகப்பெரிய அணு உலை ஆகும். இதனிடையே, இந்த அணு உலையை கைப்பற்றும் நோக்கில் கடந்த ஒரு வாரமாக ஜப்போரிஜியா நகர் மீது ரஷ்யப் படையினர் பயங்கர தாக்குதலை நடத்தினர். அவர்களை நகரத்திற்குள் நுழைய விடாமல் உக்ரைன் ராணுவத்தினர் கடுமையாக சண்டையிட்டு தடுத்து வந்தனர்.

இந்நிலையில், இன்று மதியம் ரஷ்யாவின் ராணுவ ஹெலிகாப்டர்கள் அணு உலை இருக்கும் பகுதியை சுற்றி குண்டுகளை வீசியது. இதில் அங்கிருந்த உக்ரைன் ராணுவ வீரர்கள் ஏராளமானோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும், இந்த குண்டுவீச்சில் அந்த அணு உலையிலும் தீப்பற்றியது. இதனால் ரஷ்ய வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்க முயற்சித்தனர்.

சுமார் 4 மணிநேர போராட்டத்துக்கு பிறகு தீ அணைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அந்த அணு உலையை கைப்பற்றிவிட்டதாக ரஷ்ய ராணுவம் அறிவித்துள்ளது.

இதற்கிடையே, ரஷ்ய படையினரின் குண்டுவீச்சால் அணு உலை கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும், அங்கு கதிர்வீச்சு அளவு அதிகரித்துள்ளதாகவும் உக்ரைன் அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட வீடியோவில், "ரஷ்யாவின் இந்த மனிதநேயமற்ற தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்கது. அணு உலை மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதல் என்பது உக்ரைனுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த ஐரோப்பிய நாடுகளுக்கும் ஆபத்தை விளைவிக்கக் கூடியது. இந்த தாக்குதலின் மூலம் தன்னை ஒரு அணு பயங்கரவாதி என்பதை ரஷ்ய அதிபர் புதின் நிரூபித்துவிட்டார். மற்றொரு செர்னோபில் அழிவுக்கு அவர் வழிவகுத்துள்ளார்" என செலன்ஸ்கி கூறியுள்ளார். இதேபோல, இந்த அணு உலை தாக்குதலுக்கு பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.