russia - ukraine war twitter
உலகம்

’Feb 24, 2022’ - 2 ஆண்டுகளை நிறைவு செய்ய இருக்கும் ரஷ்யா - உக்ரைன் போர்; ஆதிக்கம் செலுத்துவது யார்?

ரஷ்யா - உக்ரைன் இடையே நடைபெற்று வரும் போர், இன்னும் சில தினங்களில் 2 ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளது.

Prakash J

இரண்டு ஆண்டுகளைக் கடக்க இருக்கும் போர்

நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக்கூடாது என்பதற்காக, அதன் அண்டை நாடான ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி முதல் அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் நிதி உதவி மற்றும் ஆயுத உதவி அளித்து வருவதால், உக்ரைனும் ரஷ்யாவுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது. இதன் காரணமாக இவ்விரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் போர், இன்னும் சில தினங்களில் இரண்டு ஆண்டுகளைக் கடக்க இருக்கிறது. ஆயினும் இருதரப்பிலும் போர் தீவிரமாகி வருகிறது.

தொடர்ந்து உக்ரைன்மீது ரஷ்யா தாக்குல் நடத்திவருகிறது. அதுபோல், உக்ரைனும் ரஷ்யா மீது ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்திவருகிறது. சமீபத்தில்கூட, ரஷ்யாவுக்குச் சொந்தமான இரண்டு கப்பல்களை மூழ்கடித்ததாக உக்ரைன் தெரிவித்திருந்தது. ஆயினும், இந்தச் செய்திக்கு ரஷ்யா எந்தப் பதிலும் தெரிவிக்கவில்லை.

அமெரிக்காவிடம் உதவி கேட்கும் உக்ரைன்

இந்த நிலையில், ரஷ்யாவுடனான போரில் அமெரிக்காவின் புதிய ராணுவ உதவிகளை உக்ரைன் எதிர்பார்ப்பதாக அந்நாடு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டுப் பிரதமர் டெனிஸ் ஷ்மிஹால் ஜப்பான் மாநாட்டில் பேசியபோது, “ரஷ்யாவுக்கு எதிரான போரை முடிவுக்குக் கொண்டுவர உக்ரைனுக்கு நீண்டதூர ஏவுகணைகள் மற்றும் வெடிமருந்துகள் அதிகளவில் தேவைப்படுகிறது. அதேவேளை, ஆயுத ஏற்றுமதி கொள்கையில் ஜப்பானின் கட்டுப்பாடுகளை உக்ரைன் புரிந்துகொள்கிறது” என தெரிவித்திருப்பது உலக நாடுகளை உற்றுநோக்கச் செய்திருக்கிறது. அதற்குக் காரணம், உக்ரைன் போரில் தோல்வியைச் சந்திக்கிறதா எனக் கேள்வி எழுகிறது. அதற்கு உதாரணமாய், ரஷ்யாவின் கையும் தற்போது ஓங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

உக்ரைன் போரில் ஆதிக்கம் செலுத்தும் ரஷ்யா

உக்ரைனின் ஒரு பகுதியான அவ்திவ்காவை ரஷ்யாவை தற்போது கைப்பற்றியிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நம்பிக்கையில் மேலும் சில பகுதிகளை, அது கைப்பற்றலாம் எனத் தெரிகிறது. ஆனால் ரஷ்யா மிக சமீபத்தில் உருவாக்கிய எந்த தளத்திற்குள்ளும் உக்ரைனால் ஊடுருவ முடியாமல் பின்னடைவைச் சந்தித்து வருகிறது. மேலும், மேற்கத்திய நாடுகள் வழஙகும் உதவியில் ஏற்பட்டுள்ள பின்னடைவே, தற்போது அவ்திவ்கா பின்வாங்கலுக்கு நேரடி காரணம் என்று கருதப்படுகிறது. போரின் தொடக்கத்தில் ரஷ்யாவை வீழ்த்துவதற்காக மேற்கத்திய நாடுகள் பொருளாதாரத்தையும், ஆயுதங்களையும் தொடர்ந்து வழங்கிவந்தன.

ஆனால், தற்போது அந்த உதவிகள்கூட விரைந்து நடைபெறவில்லை எனக் கூறப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால், உக்ரைனுக்கு வழங்குவதற்கான 95 பில்லியன் அமெரிக்க டாலர் உதவிகளை அமெரிக்கா இன்னமும் வழங்கவில்லை. மற்ற நட்பு நாடுகளும் இந்த இடைவெளியை நிரப்ப போராடி வருகின்றன. இதன்காரணமாக, உக்ரைன் தள்ளாட்டத்தில் இருப்பதாகவும் இருப்பதைவைத்தும் போராடி வருவதாகவும் இதன்காரணமாகவே உக்ரைன் அரசு அமெரிக்காவிடம் தற்போது கோரிக்கை வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

புதிய பலத்துடன் களமிறங்கியிருக்கும் ரஷ்யா

அதேநேரத்தில், இந்தப் போரில் ரஷ்யா ஆயிரக்கணக்கான வீரர்களை இழந்துள்ளபோதிலும், புதிய வீரர்களை களத்துக்கு கொண்டு வருவதன் மூலமும் ஆயுதங்களை அடுத்தடுத்து வீசி வருவதன் மூலமும் தனது பலத்தை காட்டிவருகிறது. மேலும், ரஷ்யாவுக்கு வடகொரியா மறைமுகமாக உதவிசெய்வதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அவர்களுடைய சந்திப்பின்போதே பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் சொல்லப்படுகிறது. அதன்பயனாக, தற்போது ரஷ்ய அதிபர் புதின், வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு விலையுயர்ந்த கார் ஒன்றைப் பரிசாக அளித்துள்ளார்.

அதுபோல், சீனாவும் ரஷ்யாவுக்கு உதவி செய்ய தயாராக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் உக்ரைனை முழுவதும் எதிர்கொள்ள தற்போது ரஷ்யா புது பலத்துடன் இறங்கியுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. இறுதியில் இந்தப் போரில் தோல்வியடைந்துவிடக் கூடாது என்பதில் வல்லரசு ரஷ்யாவும், வாழ்வுரிமையை ரஷ்யாவிடம் விட்டுத் தரக்கூடாது என்பதில் உக்ரைனும் தீவிர உக்கிரமாய் மோதி வருகின்றன.

joe biden

ஜோ பைடனுக்கு எதிராக விமர்சனங்கள்

உக்ரைனுக்கு ஆயுத மற்றும் பொருளாதார உதவிகளைச் செய்வதில் தற்போது அமெரிக்க அரசு, காலம் தாழ்த்துவதில்கூடச் சில சிக்கல்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. முக்கியமாக இந்த ஆண்டு இறுதியில் நடைபெற இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல். ஏற்கெனவே ஜோ பைடன் அரசு, இஸ்ரேலுக்கு உதவிசெய்து வரும் நிலையில் உக்ரைனுக்கும் உதவி செய்து வருகிறது. இதனால் பொருளாதார ரீதியாகவும் பைடன் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார். மேலும், போரைத் தடுத்து நிறுத்துவதற்கு வழிபார்க்காமல் மேலும்மேலும் உதவிசெய்வதாலும் அவர் விமர்சனத்தை எதிர்கொண்டுள்ளார். குறிப்பாக, இதற்கு எதிராக வலுவான நிலைப்பாட்டை எடுக்க உள்நாட்டிலும் அவருக்கு அழுத்தம் அதிகரித்து வருகிறது. இதன்காரணமாகவே உக்ரைனுக்கு உதவி செய்வதில் தாமதம் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.