Putin and Zelenskyy twitter page
உலகம்

துருக்கி மாநாட்டில் ரஷ்ய பிரதிநிதியை அறைந்த உக்ரைன் எம்.பி.! காரணம் என்ன? வைரல் வீடியோ!

துருக்கி மாநாட்டில் ரஷ்ய பிரதிநிதியை, உக்ரைன் எம்.பி. தாக்கிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளளது.

Prakash J

“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!

IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew

நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக்கூடாது என்பதற்காக, அதன் அண்டை நாடான ரஷ்யா, கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி முதல் போர் தொடுத்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் நிதி உதவி மற்றும் ஆயுத உதவி அளித்து வருவதால், உக்ரைனும் ரஷ்யாவுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது. இதன் காரணமாக இவ்விரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் போர் ஓர் ஆண்டைக் கடந்தும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், துருக்கியின் தலைநகரான அங்காராவில் கருங்கடல் பொருளாதார ஒத்துழைப்பின் பாராளுமன்ற சபையின் 61வது மாநாடு நேற்று (மே 4) நடைபெற்றது. பொருளாதார, தொழில்நுட்ப மற்றும் சமூகம் என இருதரப்பு உறவுகளை வளர்ப்பதற்கான வழிகள் குறித்து விவாதிப்பதற்காக இந்த மாநாடு நடைபெற்றது. இதில் ரஷ்யா மற்றும் உக்ரைன் நாட்டு பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

இந்த மாநாட்டில் உக்ரைன் எம்.பியான ஒலெக்சாண்டர் மரிகோவ்ஸ்கி தன் கையில் அந்நாட்டுத் தேசியக் கொடியை வைத்திருந்தார். அப்போது, ரஷ்ய பிரதிநிதி ஒருவர், திடீரென உக்ரைன் எம்.பி. ஒலெக்சாண்டர் மரிகோவ்ஸ்கி கையில் வைத்திருந்த தேசியக் கொடியைப் பிடுங்கிக் கொண்டு விறுவிறுப்பாக நடந்தார். ரஷ்ய பிரதிநிதியை பின்தொடர்ந்த அந்த உக்ரைன் எம்.பி. அவர் கையில் வைத்திருந்த தேசிய கொடியை பிடுங்கி அவரை கன்னத்தில் அறைந்தார். தொடர்ந்து அவரை விடாமல் கடுமையாக தாக்கினார். பின்னர், அங்கிருந்தவர்கள் அவர்களுக்கு இடையே நடந்த தாக்குதலை தடுத்து நிறுத்தினர். இந்த நிகழ்வை வீடியோ எடுத்தவர்கள், இணையத்தில் வெளியிட்டனர். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஏற்கெனவே, ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் காரணமாக அதிகரித்து வரும் பதற்றத்துக்கு மத்தியில் இப்பிரச்னை மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து வழக்கறிஞர் இப்ராஹிம் சைடன் தன்னுடைய ட்விட்டர் பதிவில், "ரஷ்ய பிரதிநிதி உண்மையிலேயே இந்த அடிக்கு தகுதியானவர். அங்காராவில் நடந்த கருங்கடல் பொருளாதார நிகழ்வில் ரஷ்ய பிரிதிநிதி சண்டையிட்டு தேசியக் கொடியை எம்.பி.ஒலெக்சாண்டர் மரிகோவ்ஸ்கி கையில் இருந்து வலுக்கட்டாயமாக பிடுங்கியுள்ளார்” என்று பதிவிட்டுள்ளார்.