இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வருவதையடுத்து, அங்கு மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு பிப்ரவரி மத்தி வரைக்கும் நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு பிறப்பிப்பு குறித்து இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறும் போது, “ மக்கள் நிச்சயம் மறுபடியும் வீட்டில் இருக்க வேண்டும். இங்கிலாந்தில் கொரோனா பரவல் காரணமாக, கடந்த மார்ச் மாதம் முதலாவதாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது புதிய உருமாறிய கொரோனா வைரஸ் ஆபத்தை தருவிக்கும் வகையில் பரவி வருவதால், இங்கிலாந்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதில் இருந்து மருத்துமனைகள், எப்போதும் காணாத அதிக அழுத்தத்தை சந்தித்து வருகின்றன.” என்றார்.
இந்த உத்தரவின் அடிப்படையில், இங்கிலாந்தில் இன்று முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்படுகின்றன. பல்கலைக்கழக மாணவர்கள் குறைந்தது பிப்ரவரி 15வரை கல்லூரிக்கு வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. அத்தியாவசியத்தை தவிர்த்து பிற அனைத்து கடைகளும் மூடப்படுகின்றன. வீட்டில் இருந்து பணியாற்ற முடிந்த பணியாளர்கள் அங்கிருந்த பணியாற்றவும், அப்படி பணியாற்ற முடியாத பணியாளர்கள் மட்டும் வெளியே வரலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஜனவரி 4ம் தேதி நிலவரப்படி, 26,626 கொரோனா நோயாளிகள் இங்கிலாந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை அதற்கு முந்தைய வாரத்தை விட 30 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்தப் பரவலானது முந்தைய கொரோனா வைரஸ் பரவலை விட 40 சதவீதம் அதிகமாக பரவுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.