உலகம்

மூச்சுவிட்ட Teddy Bear... மாட்டிக்கொண்ட கார் திருடன் - பிரிட்டன் போலீசாரின் சுவாரஸ்ய பதிவு

மூச்சுவிட்ட Teddy Bear... மாட்டிக்கொண்ட கார் திருடன் - பிரிட்டன் போலீசாரின் சுவாரஸ்ய பதிவு

Sinekadhara

பிரிட்டனில் பெரிய டெடி பியருக்குள் ஒளிந்திருந்த கார் திருடனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

பிரிட்டனில் 18 வயது நிரம்பிய ஜோசுவா டோப்சன் என்ற இளைஞர் எரிபொருள் நிரப்பச்சென்ற காரில் எரிபொருள் நிரப்புவதற்குள் பணத்தை கொடுக்காமல் காரை திருடிச்சென்றார். இதனால் கிரேட்டர் மான்செஸ்டர் போலீசார் கடந்த மே மாதத்திலிருந்து கார் திருடன் ஜோசுவாவை தேடிவந்தனர். கடந்த மாதம் அவருடைய முகவரியைக் கண்டறிந்து வீட்டிற்கு சென்றபோது ஜோசுவாவை அங்கு காணவில்லை. ஆனால் வீட்டில் கிடந்த ஒரு 5 அடி நீளமுள்ள உயிரற்ற டெடி பியர் மூச்சுவிடுவதை பார்த்திருக்கின்றனர்.

இதில் போலீசாருக்கு சந்தேகம் எழவே, அவர்கள் டெடியை அசைத்து பார்த்துள்ளனர். பஞ்சால் அடைக்கப்பட்டிருக்கும் டெடி கனத்ததை கண்டு அதனை பரிசோதித்ததில் உள்ளே ஜோசுவா உடலை சுருட்டி அமர்ந்திருந்ததை கண்டறிந்தனர். இதுகுறித்து க்ரேட்டர் மான்செஸ்டர் போலீசார் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில், ‘’நாங்கள் அவரை கைதுசெய்ய அங்கு சென்றோம். எங்கள் அதிகாரிகள் ஒரு பெரிய டெடி பியர் மூச்சுவிடுவதை கண்டு சந்தேகித்து அதனை பரிசோதித்தபோது உள்ளே டோப்சன் மறைந்திருந்தார்’’ என்று குறிப்பிட்டுள்ளனர்.

டெடிக்குள் மறைந்திருந்த ஜோசுவா தற்போது கம்பிகளுக்கு பின்னால் இருக்கிறார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த வாரம் மோட்டார் வாகனத்தை திருடிய குற்றத்திற்காகவும், லைசன்ஸ் பறிக்கப்பட்ட நிலையில் வாகனம் ஓட்டியதற்காகவும், பணம் செலுத்தாமல் பெட்ரோல் நிலையத்திலிருந்து வெளியேறியதற்காகவும் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.