உலகம்

தன்னார்வலருக்கு திடீர் உடல்நலக்குறைவு; கொரோனா தடுப்பூசி பரிசோதனை நிறுத்தம்!

தன்னார்வலருக்கு திடீர் உடல்நலக்குறைவு; கொரோனா தடுப்பூசி பரிசோதனை நிறுத்தம்!

JustinDurai

தடுப்பூசி பரிசோதனை செய்யப்பட்ட தன்னார்வலருக்கு  கடும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசி பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஆஸ்ட்ராஜெனெகா நிறுவனம் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்தை தயாரித்து வருகிறது. மருத்துவ பரிசோதனையில் உள்ள AZD1222- என்ற இந்த மருந்துதான் சந்தைக்கு வரக்கூடிய முதல் தடுப்பூசியாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. உலக அளவில் இறுதிக்கட்ட பரிசோதனையில் உள்ள 9 தடுப்பூசிகளில் ஆஸ்ட்ராஜெனெகாவும் ஒன்றாகும்.

இந்தநிலையில், தடுப்பூசி பரிசோதனை செய்யப்பட்ட தன்னார்வலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் ஆஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளதாக மருந்து நிறுவனம் தெரிவித்துள்ளது. ”ரேண்டம் முறையில் தன்னார்வலர்களுக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையை நிறுத்தியுள்ளோம். பாதுகாப்பு தரவுகள் குறித்து எங்களின் தன்னிச்சை குழு ஆய்வு செய்ய உள்ளது.

மருத்துவ பரிசோதனையின்போது, விவரிக்க முடியாத உடல்நலக்குறைவு பிரச்சனை ஏற்படும்போது இத்தகைய நடைமுறைகள் கையாளப்படுவது வழக்கமான ஒன்றுதான். பெரிய அளவில் மருத்துவ பரிசோதனை நடத்தப்படும் போது, எதேச்சையாக சில சமயங்களில் உடல்நலக்குறைவு ஏற்படும். இந்த பிரச்னைகளை தன்னிச்சையாக கண்டிப்பாக ஆய்வு செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.

முன்னதாக கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி அமெரிக்காவில் 30 ஆயிரம் தன்னார்வலர்களுக்கு அஸ்ட்ராஜெனெகாவின் தடுப்பு மருந்து பரிசோதிக்கப்பட்டது. இன்னும் சில நாட்களில் ஆஸ்ட்ராஜெனெகாவின் தடுப்பு மருந்து பரிசோதனை மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.