மாரடைப்பு facebook
உலகம்

மாரடைப்பால் 50 நிமிடங்கள் இதயத் துடிப்பு இழந்தவர் உயிர்பெற்றது எப்படி?

மாரடைப்பு ஏற்பட்டு கிட்டத்தட்ட 50 நிமிடங்கள் இதயத் துடிப்பு இல்லாமல் இருந்த நபர் சிகிச்சை மூலம் உயிர்பெற்றுள்ளார்.

ஜெனிட்டா ரோஸ்லின்

மாரடைப்பு ஏற்பட்டு கிட்டத்தட்ட 50 நிமிடங்கள் இதயத் துடிப்பு இல்லாமல் இருந்த நபருக்கு சிபிஆர் சிகிச்சையின் விளைவாக உயிர் கிடைத்துள்ள சம்பவம் இங்கிலாந்தில் அரங்கேறியுள்ளது.

31 வயது நிரம்பிய பென்வில்சன் என்பவருக்கு கடந்த ஜுன் 11 ஆம் தேதி ரத்த உறைவு காரணமாக திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அச்சமயத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்த பென்னின் காதலி ரெபேக்கா உடனடியாக ஆம்புலன்ஸை அழைத்துள்ளார். வெகு நேரமாகியும் ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு வராத காரணத்தால் விரைந்த ரெபேக்கா, உடனடியாக அவருக்கு சிபிஆர் முதலுதவி சிகிச்சை செய்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து அங்கு வந்த துணை மருத்துவர்கள் இவரை பரிசோதித்து , “பென்வில்சனை காப்பாற்றுவது மிகவும் கடினம்” என்று கூறியுள்ளனர். இதனையடுத்து, கிட்டத்தட்ட 40 நிமிடங்களுக்கு 11 முறை defibrillator எனப்படும் மின்சார அதிர்ச்சியை கொடுத்து உயிர் பிழைக்கவைக்க கடுமையாக முயற்சித்துள்ளனர். இதன்பிறகு அவருக்கு இதயம் துடிக்க ஆரம்பித்துள்ளது.

பிறகு,மீண்டும் நெஞ்சுவலி ஏற்படவே மீண்டும் 6 முறை மின்சார அழுத்தத்தினை கொடுத்துள்ளனர். இதனையடுத்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட இவர், சுயநினைவை இழந்து 5 வாரங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதன் பிறகு படிப்படியாக நடக்கவும் பேசவும் ஆரம்பித்துள்ளார்.

இது குறித்து தெரிவித்துள்ள பென்வில்சன் “நான் உயிர் பிழைக்க என் ரெபேக்காதான் காரணம்.. என்னுடன் அவர்தான் இருந்தார். வாழ்க்கை எனக்கு இரண்டாம் வாய்ப்பு கொடுத்துள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.

இப்படி கிட்டத்தட்ட 2 முறை நெஞ்சுவலி ஏற்பட்டும், 50 நிமிடங்கள் வரை இதய துடிப்பு நின்ற பிறகும் மீண்டும் பென்வில்சன் உயிர் பெற்ற சம்பவம் பெரும் ஆச்சர்யமாக பார்க்கப்படுகிறது.