உணவு விநியோக சேவையில் ஈடுபட்டுள்ள உபர் நிறுவனம் தங்களது வழக்கமான பணிகளுக்கு ட்ரோன் (DRONE) எனப்படும் குட்டி விமானங்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
ஹோட்டலுக்கு சென்று உணவு சாப்பிடும் காலம் மாறி, வீட்டிற்கே சாப்பாட்டை வரவைத்து உண்ணும் நிலை இன்று நடைமுறையில் உள்ளது. சாப்பாட்டை ஆர்டர் செய்தால் டெலிவரி செய்வது ஒரு நபராகவே இதுநாள் வரை இருந்தது. ஆனால் தற்போது அந்த வேலையை ஆளில்லா ட்ரோன் விமானங்கள் செய்ய உள்ளன.
போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டும், நேரம் அதிகரிப்பு, டெலிவரி பாய்கள் சம்பளம் ஆகியவற்றை குறைக்க பிரபல உணவு விநியோக நிறுவனமான உபர் ட்ரோன் விமானத்தில் டெலிவரி செய்யும் முறையை அறிமுகம் செய்துள்ளனர். அமெரிக்காவின் சான்டியாகோ நகரில் பரிசோதனை ரீதியில் குட்டி விமானங்கள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு உணவு வினியோகிக்கப்பட்டதாக உபர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நடைமுறை வெற்றி பெற்றதால் பிற நகரங்களுக்கும் இச்சேவை விரிவுபடுத்தப்பட உள்ளதாகவும் உபர் நிறுவனம் தெரிவித்துள்ளது. அமேசான், கூகுள் போன்ற நிறுவனங்களும் குட்டி விமானங்களைப் பயன்படுத்தி பொருள் விநியோக சேவையை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.