உலகம்

தந்தை இந்து.. தாய் இஸ்லாம்.. குழந்தைக்கு முதல்முறையாக பிறப்புச் சான்றிதழ் வழங்கிய யுஏஇ

தந்தை இந்து.. தாய் இஸ்லாம்.. குழந்தைக்கு முதல்முறையாக பிறப்புச் சான்றிதழ் வழங்கிய யுஏஇ

webteam

ஐக்கிய அரபு நாட்டில் இஸ்லாமிய பெண் மற்றும் இந்து ஆண் தம்பதியின் குழந்தைக்கு முதல் முறையாக பிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவை சேர்ந்த கிரண் பாபு ஷார்ஜாவில் வசித்து வருகிறார். இவரும் சானம் சபூ சித்திக் என்ற இஸ்லாமிய பெண்ணும் கடந்த 2016-ஆம் ஆண்டு கேரளாவில் திருமணம் செய்தனர். இவர்களுக்கு 2018-ஆம் ஆண்டில் ஐக்கிய அரபு நாட்டிலுள்ள மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு பிறப்பு பதிவுச் செய்ய மறுக்கப்பட்டது. ஏனென்றால் ஐக்கிய அரபு நாடுகள் விதிகளின்படி, இஸ்லாமிய ஆண்கள் பிற மதப் பெண்களை திருமணம் செய்யலாம். ஆனால் இஸ்லாமிய பெண்கள் பிற மத ஆண்களை திருமணம் செய்ய முடியாது. இதனால் அந்தக் குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் மறுக்கப்பட்டு வந்தது.

இதுதொடர்பாக குழந்தையின் தந்தை கிரண் பாபு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். முதலில் இந்த வழக்கு நான்கு மாதங்கள் விசாரிக்கப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து அங்குள்ள இந்திய தூதரகத்தின் உதவியை பாபு நாடினார். இந்திய தூதரகம் அக்குழந்தைக்கு அவுட் பாஸ் வழங்கியது. எனினும் குடிவரவு அதிகாரிகள் இதனை ஏற்க மறுத்தனர். இதனைத்தொடர்ந்து மீண்டும் நீதிமன்றத்தில் பாபு வழக்கு தொடுத்தார். 

இந்நிலையில் ஐக்கிய அரபு நீதிமன்றம் அக்குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் வழங்க உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் முதல் முறையாக ஐக்கிய அரபு நாடுகளின் விதிகளை தளர்த்தி அக்குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் அளிக்க உத்தரவிட்டனர்.