முகம்மது முய்சு எக்ஸ் தளம்
உலகம்

மாலத்தீவு | அதிபருக்கு சூன்யம் வைத்ததாக 2 அமைச்சர்கள் உள்பட 4 பேர் கைது - விசாரணை தீவிரம்!

Prakash J

கடந்த ஆண்டு நவம்பர் 17ஆம் தேதி முகம்மது முய்சு பதவியேற்றதில் இருந்து இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. மாலத்தீவு தேர்தல் பிரசாரத்தின்போது, ​​அவர் அடிக்கடி இந்தியாவை விமர்சித்தார் மற்றும் இந்திய ராணுவ வீரர்களை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார். அதன்பேரில் கடந்த மே மாதத்துடன் இந்திய ராணுவ வீரர்கள் வெளியேறி இருந்தனர். இதற்கிடையே, கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆளும் அதிபர் முகம்மது முய்சுவின் மக்கள் தேசிய காங்கிரஸ் (PNC) கட்சி, மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது.

இந்த நிலையில், மாலத்தீவு அதிபர் முகம்மது முய்ஸுக்கு சூன்யம் வைத்ததாக எழுந்த குற்றச்சாட்டின்கீழ், அந்நாட்டு அமைச்சர்கள் இரண்டு பேர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜூன் 23ஆம் தேதி மாலத்தீவின் அமைச்சர்கள் ஃபாத்திமா ஷம்நாஸ், ஆடம் ரமீஸ் ஆகியோருடன், வேறு இரண்டு பேரையும் மாலத்தீவு காவல்துறை கைது செய்தது. இவர்கள் மீது அதிபருக்கு சூனியம் வைத்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மாலத்தீவின் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருப்பவர் ஃபாத்திமா ஷம்நாஸ், இவரது முன்னாள் கணவர் ஆடம் ரமீஸ். இவர், அதிபர் அலுவலக விவகாரத் துறை அமைச்சராக உள்ளார்.

இந்தச் சூழலில், பில்லி சூனியம் தொடர்பான சில நடவடிக்கைகள் அதிபர் அலுவலகத்தில் காணப்பட்டதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் இவர்கள் இருவரும் தற்போது கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இதையும் படிக்க: 'UPSC தேர்வு' எழுதாமலேயே ஐஏஎஸ் அதிகாரி ஆனாரா? - சர்ச்சை குறித்து ஓம் பிர்லா மகள் கொடுத்த விளக்கம்!

இதில், ஃபாத்திமா ஷம்நாஸ் மற்றும் ரமீஸ் ஆகியோர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அமைச்சர்களுடன் அடையாளம் கூறப்படாத மேலும் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் 7 நாள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர், தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

எனினும், இந்த சூனியம் விவகாரம் தொடர்பாக மாலத்தீவு அரசாங்கமோ அல்லது அதிபர் மாளிகையோ அதிகாரப்பூர்வமாக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. அதேநேரத்தில், இந்த செய்தி உலக அளவில் கவனம் பெற்றுள்ளது. கைது செய்யப்பட்டிருக்கும் இரு அமைச்சர்களுமே மிகவும் முக்கியமானவர்கள்.

தவிர, மாலேவின் மேயராக முகம்மது முய்சு பதவி வகித்தது காலம் முதல் ஃபாத்திமா அவருடன் பணியாற்றி வருகிறார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மாலத்தீவு அதிபராக முய்சு பதவியேற்றபோது ஃபாத்திமா சுற்றுச்சூழல் அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். மேலும், முகம்மது முய்சுக்கு நெருங்கிய உதவியாளராக அவரது கணவர் ஆடம் ரமீஸ் இருந்து வந்துள்ளார். இந்த கைது நடவடிக்கைக்கு முன்பு, தொடர்ந்து சந்தேகத்துக்கு இடமான பல சம்பவங்கள் நிகழ்ந்திருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த ஐந்து மாதங்களாக, அதிபர் முகம்மது முய்சு பங்கேற்ற பொது நிகழ்ச்சிகள் எதிலும் ஆடம் பங்கேற்காமல் இருந்தது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் மாலத்தீவு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிக்க: டிரம்ப் vs பைடன்; அனல் பறந்த நேரடி விவாதம்... குற்றச்சாட்டுகளும் பதில்களும்..