உலகத்தில் ஒரே மாதிரியான உருவம் கொண்ட ஏழு பேர் இருப்பார்கள் எனச் சொல்லப்படுவது உண்டு. இதை நாம் சில திரைப்படங்கள் மூலமாக பார்த்திருப்போம். ‘இதல்லாம் நிஜத்துல நடக்காது’ என நினைத்தும் இருப்போம்.
அதான் இல்லை... உண்மையில் இதுபோல் ஒரு சம்பவம் தற்போது நிகழ்ந்துள்ளது. இந்த உண்மை சம்பவத்தில் சம்பந்தப்பட்ட இருவரும் வேறுவேறு வயதைக் கொண்டவர்கள். எதார்த்தமாக இவர்கள் இருவரும் ஒரு விமானத்தில் சந்தித்துக் கொண்ட நிகழ்வு பேசுபொருளாகி உள்ளது.
லண்டனில் இருந்து பாங்காக் சென்ற விமானத்தில்தான் ஒரேமாதிரி தோற்றம்கொண்ட 2 பேர் ஏதேச்சையாக சந்தித்துக்கொண்ட சுவாரஸ்யம் நடந்துள்ளது.
இருவரின் பெயரும் மார்க் கார்லண்ட் என தெரியவந்தபோது மேலும் சுவாரஸ்யம் கூடிப்போனது.
இருவரும் ஒரே நபர் என நினைத்து விமானப் பணியாளர்களும் சற்றுக் குழம்பிப் போயினர். வயது மட்டும்தான் இருவருக்கும் வித்தியாசமாக இருந்தது. பேருந்து ஓட்டுநரான ஒருவருடைய வயது 58. இன்னொருவருடைய வயது 62. அவர் ஒரு கட்டடக் கலைஞர். இதன்பின்னரே குழப்பம் தீர்ந்தது.
இருவரும் தங்கள் பயணத்தின்போது உருவ ஒற்றுமை குறித்தும் கண்டறிந்துள்ளனர். “நாங்கள் இருவரும் 15 மைல் தொலைவில் மட்டுமே இருந்துள்ளோம். ஒரே வழியில் பயணித்துள்ளோம். இருவருக்குமே ஒரு நண்பர் பொதுவாக இருந்துள்ளார்” என்றுள்ளனர். இதுகுறித்து அவர்கள், “நாங்கள் ஒருவரையொருவர் சந்தித்தபோது மிகவும் ஆச்சரியப்பட்டோம். மேலும் பல பொதுவான விஷயங்களைக் கண்டறிந்தோம்” என்றுள்ளனர்.