உலகம்

வங்கதேசத்தில் வெடித்தது அரசியல் வன்முறை : 2 பேர் பலி, பலர் படுகாயம்

webteam

வங்கதேசத்தில் தேர்தல் பரப்புரையின் போது ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சியினர் இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது.

வங்கதேசத்தில் நாடாளுமன்ற தேர்தல் டிசம்பர் 30ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான பரப்புரைப் பணிகள் அங்கு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் ஆளும் கட்சியான அவாமி லீக் கட்சிக்கும், எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசிய கட்சிக்கும் இடையே அவ்வப்போது மோதல்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் வங்கதேசப் பிரதமரும், அவாமி லீக் கட்சித் தலைவருமான ஷேக் ஹாசினா தலைநகரம் தாகாவில் பரப்புரையில் ஈடுபட்டு வந்தார். அதேபகுதியில் எதிர்க்கட்சியினரும் நுற்றுக்கணக்கான மோட்டார் சைக்கள்களில் பரப்புரையில் ஈடுபட்டனர். 

அந்தச் சமயத்தில் இருக்கட்சியினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அது கைகலப்பாக மாறி, கலவரமாகவும் உருவெடுத்தது. இந்தக் கலவரத்தில் அவாமி லீக் கட்சியைச் சேர்ந்த 2 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 12க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். கலவரம் ஏற்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், தாக்குதல் நடத்தி வன்முறையில் ஈடுபட்டவர்களை கலைத்தனர். இதுதொடர்பாக 45 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து பேசியுள்ள வங்கதேச காவல்துறையினர், “பரப்புரைக் கூட்டங்களுக்கு அனுமதி அளிக்கும் அதிகாரிகள் இரண்டு கட்சிகளுக்கும் ஒரே இடத்தில் அனுமதி அளிப்பதை இனி தவிர்க்க வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டுள்ளார். 

ஆளும் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஹசன் முகமது கூறும்போது, “எங்கள் கட்சி அமைதியை மட்டுமே கடைபிடிக்க முயற்சித்தது. ஆனால் ஆளும் கட்சியினர் தான் எங்கள் மீது தாக்குதல் நடத்தினர்” என்று குற்றம்சாட்டியுள்ளார்.  ஆனால் எதிர்க்கட்சி தரப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள விளக்கத்தில், “நாங்கள் தாக்குதலில் ஈடுபடவில்லை. மோட்டார் சைக்களில் வந்த எங்கள் கட்சியினரில் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். எங்கள் கட்சி செயலாளரும் தாக்கப்பட்டுள்ளார்” என்று குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளது. 

வங்கதேசத்தை பொறுத்தவரை அவாமி லீக் கட்சி, பங்களாதேஷ் தேசிய கட்சி ஆகிய இரண்டு கட்சிகளுமே ஆட்சி செய்துள்ளன. எனவே இரண்டும் சம பலத்துடன் காணப்படுகின்றன. இதில் எதிர்க்கட்சி இரண்டு முறை ஆட்சி செய்த கட்சியாகும். தற்போது அதன் தலைவர் காலிதா சியா சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.