அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யா பின்புலமாக செயல்பட்டது உண்மைதான் என்று ட்விட்டர் அறிவித்துள்ளது.
அமெரிக்காவில், கடந்த 2016 ஆம் ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற்ற போது, ரஷ்யாவில் இருந்து ட்விட்டர் கணக்குகள் மூலம், ட்ரம்பிற்கு ஆதரவாகவும், ஹிலாரிக்கு எதிராகவும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
நேற்று ட்விட்டர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், கிட்டத்தட்ட 2000 விளம்பரங்கள் மூலம் 2016 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்த, ரஷ்ய டிவி நிறுவனத்தின் மூலம் வெளியிடப்பட்டிருக்கலாம் என்றும், மாஸ்கோ அரசுக்கு தொடர்புடைய ஆர்டி டிவி சேனலுக்கு நெருக்கமான ஒரு சமூகவலைதள நிறுவனம் மூலம், ஜனாதிபதி தேர்தலுக்கான விளம்பரங்கள் பகிரப்பட்டுள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான விளம்பரங்களுக்காக ஆர்டி டிவி நிறுவனம் சுமார் 2,74,000 அமெரிக்க டாலர்களை செலவு செய்திருக்கலாம் எனவும் தெரியவந்துள்ளது.
அமெரிக்க தேர்தல் விதிகளை மீறும் விதமாக, ரஷ்யா மூலம் பணம் கொடுக்கப்பட்டு, அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பிரச்சாரம் செய்யும் விதமாக அரசியல் செய்திகளை சமூக வலைதளங்களில் பரப்பினர் என்று ஃபேஸ்புக் சில தினங்களுக்கு முன் அறிவித்திருந்தது. ட்விட்டர் ஒரு ப்ளாகில் வெளியிட்ட செய்தியில், பொதுமக்கள் கொள்கைக்கான அமெரிக்காவின் துணை தலைவர் கோலின் குரோவில் கடந்த வியாழக்கிழமையன்று தங்களது இரு ஊழியர்களை, அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு குறித்து விசாரணை மேற்கொண்டார் என்று கூறியுள்ளது.
மேலும், ஃபேஸ்புக்கில் 450 கணக்குகள் ஜனாதிபதி தேர்தலில் தலையிடுவதற்காக தொடங்கப்பட்டு செயல்பட்டதாக கூறுவது உண்மையாக இருக்கலாம். இந்த 450 ஃபேஸ்புக் கணக்குகளில், 22 கணக்குகள் ட்விட்டர் கணக்குகளுடன் தொடர்புடையது என்று ட்விட்டர் நிர்வாகம் கூறியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் பின்புலத்தில் இருந்து ரஷ்யா வேலை செய்ததா என்று புலனாய்வு செய்யும் அமெரிக்க புலனாய்வுத்துறை, ஆர்டி டிவி நிறுவனம் இதற்காக 1823 விளம்பர ட்வீட்களை பகிர, சுமார் 2,74,000 அமெரிக்க டாலர்கள் செலவு செய்திருக்கிறது என்று கூறியுள்ளது.