அமெரிக்காவில் நடைபெற்ற 47வது அதிபர் தேர்தலில், முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் அமோக வெற்றி பெற்றுள்ளார். 2025 ஜனவரி 20 ஆம் தேதி பதவியேற்கவும் உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மறுபுறம், அவரைச் சுற்றி நிறைய எதிர்பார்ப்புகளும், சவால்களும் காத்திருக்கின்றன.
குறிப்பாக உக்ரைன் - ரஷ்யா இடையே நடைபெறும் போர், இஸ்ரேல் - காஸா இடையே நடைபெறும் போர் ஆகிய இரண்டும் அவருக்கு பெரிய சவால்களான உள்ளன. காரணம், உக்ரைன் மற்றும் இஸ்ரேல் ஆகிய இரண்டு நாடுகளுக்கும் தற்போதைய அமெரிக்க அதிபரான ஜோ பைடன் அரசாங்கம்தான் நிதியுதவி, ஆயுத உதவியை வழங்கி வருகின்றன. இதனாலேயே, இந்த இரண்டு இடங்களிலும் வருடங்களைக் கடந்து போர் நடைபெற்று வருகிறது.
இந்தச் சூழலில்தான் தற்போது அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் அதிபராகி உள்ளார். இதனால் போர் நிறுத்தம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக உலக நாடுகள் கருதுகின்றன. காரணம், அவர் தேர்தல் பிரசாரத்தின்போது போர் நிறுத்தம் ஏற்படுவதற்கான வழிமுறைகளைக் காண்பேன் எனத் தெரிவித்திருந்தார்.
மேலும், இதை உறுதிப்படுத்தும் விதமாக தேர்தல் வெற்றிக்குப் பிறகும், “இனிவரும் காலம் அமெரிக்காவின் பொற்காலமாக இருக்கும். போரை தொடங்குவேன் என கூறினார்கள்; நான் போரை நிறுத்துவேன். போரை நடத்துவதைவிட நிறுத்துவதில்தான் ஜனநாயகமும், சுதந்திரமும் உள்ளது. ஆனால், அமெரிக்காவுக்கு வலிமையான ராணுவம் தேவை என்பதை மறுப்பதற்கில்லை” என உறுதியளித்திருந்தார். இதனால், போருக்கு ஒரு முடிவு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருவேளை, ரஷ்யா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் போரை நிறுத்துவதற்கு ஒப்புக்கொள்ள மறுத்தால், அமெரிக்காவின் ட்ரம்பின் புதிய அரசோ, உக்ரைன் மற்றும் இஸ்ரேலுக்கு அளித்துவரும் நிதியையும் ஆயுதங்களையும் நிறுத்தும் எனக் கூறப்படுகிறது. ஏனெனில் ட்ரம்ப், அமெரிக்க ராணுவத்தைப் பலப்படுத்துவதில் குறியாக இருக்கிறார்.
இந்த நிலையில்தான், “டொனால்டு ட்ரம்பின் அமெரிக்க நிர்வாகமானது, தீர்வு அடிப்படையிலான அணுகுமுறையை எடுத்தால் உக்ரைனில் போர் எளிதில் முடிவுக்கு வரும்” என துருக்கி நாட்டு அதிபர் தையிப் எர்டோகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “ட்ரம்ப் நிர்வாகம் பிரச்னையை தீர்வு அடிப்படையிலான கண்ணோட்டத்துடன் அணுகுவதைப் பார்த்தால், இந்தப் போரை நாம் எளிதாக முடிவுக்குக் கொண்டு வர முடியும். மேலும், பேச்சுவார்த்தை மற்றும் உடன்பாடு ஆகியவை அமைதிக்கான கதவைத் திறக்கும். நாம் இருதரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தக்கூடிய ஒரு சமாதான நாடு. இதை நாங்கள் பலமுறை செய்துள்ளோம். மீண்டும் செய்யவுள்ளோம். இந்தப் போர் இப்போது முடிவுக்கு வர வேண்டும். அந்தவகையில், நாங்கள் எங்கள் முயற்சியில் அமைதியாய் கவனம் செலுத்திவருகிறோம். அதைத் தொடர்ந்து செய்வோம்” எனத் தெரிவித்துள்ளார்.
இதேகருத்தை ஹங்கேரி பிரதமர் விக்டர் ஓர்பனும் தெரிவித்துள்ளார். அவர், ”அமெரிக்கர்கள் இந்தப் போரை விட்டுவிடுவார்கள், முதலில் அவர்கள் போரை ஊக்குவிக்க மாட்டார்கள். ஐரோப்பா மட்டும் இந்தப் போருக்கு நிதியளிக்க முடியாது மற்றும் போர் குறித்து அமைதியாக இருப்பவர்கள் புதிய சூழ்நிலைக்கு மாறுவர்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: IND Vs SA | ஒரே போட்டி.. ருத்ரதாண்டவம் ஆடிய சஞ்சு சாம்சன்.. பல சாதனைகள் முறியடிப்பு!