உலகம்

துருக்கியை போல இந்தியாவின் மீதும் பாயுமா ட்ரம்ப் நடவடிக்கை?

துருக்கியை போல இந்தியாவின் மீதும் பாயுமா ட்ரம்ப் நடவடிக்கை?

webteam

ரஷ்யாவிடமிருந்து எஸ்-400 ரக விமான பாதுகாப்பு சாதனங்களை வாங்க ஒப்பந்தம் செய்த துருக்கிக்கு அமெரிக்கா தனது எஃப்-35 விமான பயிற்சிக்கான ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது.

துருக்கி தேசம் ரஷ்யாவிடமிருந்து எஸ்-400 என்ற விமான பாதுகாப்பு சாதனத்தை வாங்க ஒப்பந்தம் செய்திருந்தது. இதனையடுத்து அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யுமாறு துருக்கிக்கு கெடுபிடி கொடுத்தது. இதனை ஏற்க மறுத்த துருக்கிக்கு தற்போது அமெரிக்கா வழங்கி வந்த எஃப்-35 ரக விமான பயிற்சிக்கான ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது. 

எஃப்-35 என்பது அமெரிக்காவிடம் உள்ள உயர்ந்த அளவிலான விமானமாகும். இந்த விமானத்தை இயக்குவது மற்றும் இந்த விமானத்தை அந்த நாட்டிற்கு அளிப்பது தொடர்பாக துருக்கியும் அமெரிக்காவும் ஒப்பந்தம் செய்திருந்தனர். இதனையடுத்து துருக்கி நாட்டு விமானப்படை வீரர்கள் அமெரிக்காவில் தங்கி பயிற்சி மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் அவர்களுக்கு வழங்கி வந்த பயிற்சியை ரத்து செய்ததுடன் அவர்கள் அனைவரும் ஜூலை 31ஆம் தேதிக்குள் துருக்கி திரும்பி செல்லவேண்டும் என்று தெரிவித்துள்ளது. 

இதேபோன்ற ஒப்பந்தத்தை இந்தியாவும் ரஷ்யாவிடம் மேற்கொண்டுள்ளது. அதாவது இந்தியாவும் ரஷ்யாவிடமிருந்து எஸ்-400 விமான பாதுகாப்பு சாதனத்தை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது. இதனையடுத்து இந்தியாவையும் அமெரிக்கா எச்சரித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தை முன்னெடுத்து சென்றால் அமெரிக்கா இந்தியா மீது சில தடைகளை விதிக்கும் எனக் கூறி எச்சரித்துள்ளது. 

ஏனென்றால், ரஷ்யாவின் எஸ்-400 விமான பாதுகாப்பு சாதனம் எஃப்-35வும் ஒரே இடத்திலிருந்தால் அதன்மூலம் எஃப்-35 ரக விமானத்திலுள்ள ரேடார் வசதிகள் மற்றும் விமானத்திலுள்ள தொழில்நுட்பங்கள் குறித்து ரஷ்யா அறிந்து கொள்ள முடியும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதனால் இந்தியாவிற்கும் எஸ்-400 விமான பாதுகாப்பு சாதனங்களை வாங்கினால் இந்தியா மீது நடவடிக்கைகள் பாயும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.