உலகம்

வடகொரியாவுடன் இனி ஆக்‌ஷன் தான்: டிரம்ப்

வடகொரியாவுடன் இனி ஆக்‌ஷன் தான்: டிரம்ப்

webteam

வட கொரியாவுடன் இனியும் பேச்சுவார்த்தை நடத்துவது தீர்வாகாது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். 

பல்வேறு நாடுகளின் எதிர்ப்புகளையும் தாண்டி வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. அத்துடன் ஹைட்ரஜன் குண்டுகள் உள்ளிட்ட பல சக்தி வாய்ந்த வெடிகுண்டு சோதனைகளிலும் ஈடுபட்டது. இதுபோன்ற சம்பவங்களால் உலக நாடுகள் பலவும் வடகொரியா மீது கடும் அதிருப்தி அடைந்துள்ளது. இதன் எதிரொலியாக வடகொரியா மீது பலதரப்பட்ட பொருளாதார தடைகளும் விதிக்கப்பட்டுள்ளது. 

சமீபத்தில் ஜப்பான் மீது ஏவுகணையை பறக்க விட்டு அபாயகரமான சோதனை ஒன்றையும் வடகொரியா நிகழ்த்தியுள்ளது. இதற்கு ஜப்பான் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனைகள் அனைத்தும் குறிப்பாக அமெரிக்காவிற்கு எதிராகவே நடத்தப்படுவதாக சர்வதேச நாடுகள் கருதுகின்றன. 

இந்நிலையில் வடகொரியாவின் நடவடிக்கைகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப், டிவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் 25 ஆண்டுகள் பொறுமைக்கு பிறகு வடகொரியாவுக்கு தக்க சன்மானம் கொடுக்கப்போவதாகவும், இனி பேச்சுவார்த்தையில் தீர்வு கிடைக்காது என்றும் குறிப்பிட்டுள்ளார்.