அமெரிக்க போர் விமானங்களில் சீனக் கொடிகளை பறக்கவிட்டு ரஷ்யாவில் குண்டு வீசுங்கள் என்று முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.
டொனால்டு டிரம்ப் தனது குடியரசுக் கட்சி நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது உக்ரைன் - ரஷ்யா போர் குறித்து விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய டிரம்ப், "ரஷ்யா மீது எந்தக் காரணத்தை கொண்டும் தாக்குதல் நடத்த மாட்டோம் என்று அதிபர் ஜோ பிடன் கூறி வருகிறார். இப்படி பேசுவதை முதலில் அவர் நிறுத்த வேண்டும். மனிதநேயத்திற்கு எதிராக ரஷ்யா செயல்பட்டு வருகிறது. இவ்வாறு நடைபெற நாம் விடக்கூடாது. நேட்டோ என்பது வெறும் காகிதப் புலியாக செயல்பட்டு வருவது வருத்தமளிக்கிறது" என்றார்.
தொடர்ந்து கிண்டலாக பேசிய அவர், உக்ரைன் போரை நிறுத்த ஒரே வழிதான் இருக்கிறது. அமெரிக்க போர் விமானங்களில் சீனக் கொடிகளை பறக்கவிட்டு ரஷ்யா மீது குண்டுகளை வீச வேண்டும். பிறகு ரஷ்யாவும், சீனாவும் ஒன்றையொன்று தாக்கிக் கொள்ளும். நாம் நிம்மதியாக அமர்ந்து வேடிக்கை பார்க்கலாம்" எனக் கூறினார். டிரம்பின் இந்த பேச்சால் அரங்கம் முழுவதும் பெரும் சிரிப்பலை வெடித்தது.