உலகம்

“ஈரான் நெருப்புடன் விளையாடி வருகிறது” - அதிபர் ட்ரம்ப்

“ஈரான் நெருப்புடன் விளையாடி வருகிறது” - அதிபர் ட்ரம்ப்

webteam

நெருப்புடன் ஈரான் விளையாடி வருகிறது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

அமெரிக்கா-ஈரான் நாடுகள் இடையே கடந்த 2018ஆம் ஆண்டு முதல் பதட்டமான சூழல் நிலவிவருகிறது. 2018ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஈரான் உடனான அணு ஆயுத ஒப்பந்தத்தை அமெரிக்கா முறித்து கொள்வதாக அறிவித்தார். இதனையடுத்து இரு நாடுகளுக்கான உறவில் விரிசல் ஏற்பட்டது. 

இதனைத் தொடர்ந்து அமெரிக்கா ஈரான் மீது பல பொருளாதார தடையை விதித்தது. இதற்குப் பதிலடியாக ஈரான் உரேனியம் தயாரிப்பதை அதிகரித்தது. தற்போது உரேனியத்தின் அளவு 2015ஆம் ஆண்டு போடப்பட்ட அணுஆயுத ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்த அளவை அடைந்துள்ளது. 

இந்நிலையில் அமெரிக்கா இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரான் நாட்டை எச்சரித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்கா அதிபர் ட்ரம்ப், “அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது அவர்களுக்கு தெரியும். உரேனியம் அளவை அதிகரித்து ஈரான் நாடு நெருப்புடன் விளையாடி வருகிறது” எனத் தெரிவித்துள்ளார். 

முன்னதாக ஈரான் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷரீஃப், “நாங்கள் அணுஆயுத ஒப்பந்ததை மீறவில்லை. பிரிட்டன்,பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் ஒப்பந்தத்தின்படி நடந்துகொண்டால் நாங்கள் உரேனியம் தயாரிப்பதை நிறுத்திக் கொள்வோம்” எனத் தெரிவித்திருந்தார். 

2015ஆம் ஆண்டு போடப்பட்ட அணுஆயுத ஒப்பந்தத்தின்படி ஈரான் நாடு அணுகுண்டு தயாரிக்ககூடாது, அணுஆயுத தயாரிப்பதை குறைக்கவேண்டும். அத்துடன் ஐஏஇஏ(IAEA) என்ற அமைப்பு ஈரான் நாட்டின் அணு ஆயுதங்கள் மற்றும் அணு உலைகளை பார்வையிட அணுமதிக்கவேண்டும் ஆகியவை ஒத்துக்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.