உலகம்

கொரிய தீபகற்பத்தில் மீண்டும் பதற்றம் : தாக்குதலுக்கு தயாராகுகிறாரா கிம் ?

கொரிய தீபகற்பத்தில் மீண்டும் பதற்றம் : தாக்குதலுக்கு தயாராகுகிறாரா கிம் ?

webteam

எதிரெதிர் துருவங்களாக இருந்த அமெரிக்காவும், வடகொரியாவும் திடீரென தோளோடு, தோள் சேர்த்துக் கொள்ளும் அளவுக்கு அதிரடியான அதிசய நிகழ்வு நடைபெற்றது. குறிப்பாக சிங்கப்பூரில் கடந்த ஆண்டு ஜூன் 12 ஆம் தேதி முதல் முறையாக நிகழ்ந்த வரலாற்று சந்திப்பு, ஒட்டுமொத்த உலக நாடுகளையும் வியப்பில் ஆழ்த்தியது.

இந்த சந்திப்புக்குப் பின் தென் கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவை மிரட்டும் வகையில் மேற்கொள்ளப்பட்ட அணு ஆயுத சோதனைகளையும் வடகொரியா அறவே நிறுத்திக் கொண்டதும், உலக நாடுகளை அதிசயிக்க வைத்தது. எனினும் அணு ஆயுதங்களை முழுமையாக கைவிட்டால் மட்டுமே, வடகொரியா மீதான தடைகளை விலக்கிக் கொள்ள நேரிடும் என ‌திட்டவட்டமாக அமெரிக்கா தெரிவித்தது. பின்னர் வியட்நாம் தலைநகர் ஹனோயில் இரண்டாவது முறையாக நடைபெற்ற பேச்சுவார்த்தை பாதியிலேயே நிறைவடைந்தது.

இந்நிலையில் முழு அளவிலான தாக்குதலுக்கு தயாராகுமாறு ராணுவத்தை வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் கேட்டுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கொரிய தீபகற்பத்தில் மீண்டும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தொடர் அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டிருந்த வடகொரியா, சர்வதேச நாடுகளின் அழுத்தத்தைத் தொடர்ந்து இறங்கி வந்தது.இதில், ட்ரம்புடன் நடைபெற்ற 2-வது பேச்சுவார்த்தையில் வடகொரியா மீதான தடையை உடனடியாக நீக்க வேண்டும் என கிம் விடுத்த கோரிக்கையை ட்ரம்ப் நிராகரித்ததால், பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததாகக் கூறப்பட்டது. இதனால் வட கொரியா தொடர்ந்து அணு ஆயுதங்களையும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் சோதித்து வருகிறது.