மோடி, ட்ரம்ப் எக்ஸ் தளம்
உலகம்

அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி.. சந்திக்க விருப்பம் தெரிவித்த ட்ரம்ப்!

அமெரிக்காவுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க இருப்பதாக முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

Prakash J

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் அங்கம் வகிக்கும் 'குவாட்' அமைப்பின் மாநாடு, அமெரிக்காவின் டெல்வாரே நகரில் நடைபெற இருக்கிறது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையில் நடைபெற இருக்கும் இம்மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, வரும் 21ஆம் தேதி அமெரிக்கா செல்கிறார். அக்டோபர் 23ஆம் தேதிவரை அமெரிக்காவில் இருக்கும் பிரதமர் மோடி, அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். இந்த நிலையில், அமெரிக்காவுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க இருப்பதாக முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் விருப்பம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மிச்சிகன் மாகாணம் ஃபிளிண்ட் நகரில் குடியரசு கட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்குபெற்று உரையாற்றிய ட்ரம்ப், “அமெரிக்கா - இந்தியா இடையிலான வர்த்தக உறவுகளில், மிகப்பெரிய துஷ்பிரயேகம் செய்யும் நாடாக இந்தியா இருந்து வருகிறது” எனக்கூறி இந்தியாவை கடுமையாக குற்றஞ்சாட்டிய போதிலும், பிரதமர் நரேந்திர மோடி மிகவும் அற்புதமான நபர் என்று புகழாரம் சூட்டி இருக்கிறார்.

இதையும் படிக்க: NZ Vs SL | 16 ஆண்டுகளுக்குப் பிறகு 6 நாட்கள் நடைபெறும் டெஸ்ட் போட்டி.. என்ன காரணம் தெரியுமா?

பிரதமர் மோடியைச் சந்திக்க இருப்பதாக ட்ரம்ப் தெரிவித்துள்ள நிலையில், இந்த சந்திப்பு எங்கு நிகழும் என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை. எனினும், ட்ரம்ப் உடனான சந்திப்பு நிகழ இருப்பது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. இரு தலைவர்களும் கடைசியாக பிப்ரவரி 2020இல் சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் நவம்பர் மாதம் 5ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. குடியரசுக் கட்சி சார்பில் அதிகாரப்பூர்வ வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் களத்தில் உள்ளார். அதேநேரத்தில் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபரான கமலா ஹாரிஸ் உள்ளர். ட்ரம்ப் - கமலா ஹாரிஸ் நேரடி விவாதத்துக்குப் பின்னர் கமலா ஹாரிஸுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாக பல்வேறு கருத்துக்கணிப்புகளும் கூறுகின்றன.

மேலும், அமெரிக்க தேர்தலில் எதிர்தரப்பில் போட்டியிடும் கமலா ஹாரிஸ், இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பதால், அவருக்கு அதிகப்படியான ஓட்டுக்கள் கிடைக்க வாய்ப்பள்ளது. அதை தடுக்கும் வகையில், மோடியுடன் ஒரு சந்திப்பு நடத்தி, தானே இந்தியர்களுக்கு நெருக்கமானவர் என்று காட்டிக்கொள்ள ட்ரம்ப் திட்டமிடுவதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க; ரூ.2 கோடி சம்பளம்.. லண்டன் கூகுள் நிறுவனத்தில் வேலை.. பீகார் இளைஞருக்கு அடித்த ஜாக்பாட்!