Trumph, Pete Hegseth pt desk
உலகம்

அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளராக தொலைக்காட்சி பிரபலம்... பேசுபொருளான ட்ரம்பின் அறிவிப்பு!

அமெரிக்க அதிபராக தேர்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் தன் நிர்வாகத்தின் கீழ் முக்கிய பதவிகளில் ஆட்களை நியமிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இதில் பாதுகாப்புத்துறை செயலாளராக தொலைக்காட்சி தொகுப்பாளரை பரிந்துரை செய்திருப்பது பேசுபொருளாக மாறி உள்ளது

திவ்யா தங்கராஜ்

அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப், அடுத்த ஆண்டு ஜனவரியில் பதவியேற்க உள்ள நிலையில், தனது புதிய அமைச்சரவையை கட்டமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இதனையடுத்து எலான் மஸ்க்கிற்கு அரசாங்கத் திறன் துறை ("DOGE") தலைவர் பொறுப்பை வழங்கி உள்ளார்.

donald trump, elon musk

இது குறித்து ட்ரம்ப் வெளியிட்ட அறிக்கையில், “அமெரிக்க தேசபக்தர் விவேக் ராமசாமி மற்றும் கிரேட் எலோன் மஸ்க் ஆகியோர் அரசாங்கத் திறன் துறைக்கு ("DOGE") தலைமை தாங்குவார் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த இரண்டு அற்புதமான அமெரிக்கர்களும் சேர்ந்து, எனது நிர்வாகத்திற்கு நல்ல பங்களிப்பை கொடுப்பார்கள். அரசாங்க அதிகாரத்தில் நடக்கும் முறைகேடுகளை அகற்றுவதற்கு இவர்கள் இருவரும் பங்காற்றுவார்கள்” என குறிப்பிட்டு இருந்தார். தொழிலதிபரான எலான் மஸ்க் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்பிற்கு ஆதரவாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருந்தார்.

இதையடுத்து ட்ரம்ப் தனது புதிய அமைச்சரவையை கட்டமைக்கும் பணிகளில் தனக்கு ஆதரவாக இருப்பவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் என்ற விமர்சனம் எழுந்தது. இந்நிலையில், ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்பின் கீழ் பாதுகாப்பு செயலாளராக பணியாற்ற பீட் ஹெக்சேத் என்பவரை ட்ரம்ப் பரிந்துரைத்துள்ளார்.

Pete Hegseth
தொலைக்காட்சி தொகுப்பாளரும், ராணுவ வீரருமான பீட் ஹெக்சேத் நியமனத்திற்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

யார் இந்த பீட் ஹெக்சேத்?

2003 இல் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பீட் ஹெக்சேத், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார். பிறகு ராணுவத்தில் பணியாற்றியுள்ளார். 2014 இல் ஃபாக்ஸ் நியூஸில் இணைந்த ஹெக்சேத், ஃபாக்ஸ் நியூஸ் சேனலின் முக்கிய தொகுப்பாளராக அறியப்பட்டவர். இவர் எழுத்தாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பீட் ஹெக்சேத் நியமனம் குறித்து ட்ரம்ப் கூறும்போது, “எனது அமைச்சரவையில் பாதுகாப்புச் செயலாளராக பணியாற்ற பீட் ஹெக்சேத்தை நான் பரிந்துரைத்துள்ளேன் என்பதை அறிவிப்பதில் நான் பெருமைப்படுகிறேன்” எனக்கூறி, ராணுவத்தில் ஹெக்சேத்தின் பங்களிப்பையும் குறிப்பிட்டு பாராட்டினார். பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பட்டதாரியான ஹெக்சேத், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.

டொனால்ட் ட்ரம்ப்

அவர் இராணுவத்தில் இருந்த காலத்தில் குவாண்டனாமோ விரிகுடா, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் பணியாற்றினார். பீட்டின் சமீபத்திய புத்தகம் 'தி வார் ஆன் வாரியர்ஸ்' குறித்தும் ட்ரம்ப் குறிப்பிட்டு இருந்தார். ஹெக்செத் இராணுவத்தின் பலத்திற்கு முன்னுரிமை அளிப்பார் என்று ட்ரம்ப் நம்புகிறார். இதனால் "எங்கள் இராணுவம் மீண்டும் சிறப்பாக இருக்கும், அமெரிக்கா ஒருபோதும் பின்வாங்காது" என்று அறிவித்துள்ளார்.

ஹெக்செத் ராணுவத்தில் பணியாற்றி இருந்தாலும், போதிய அனுபவம் இல்லாத ஒருவரை பாதுகாப்பு துறையின் முக்கிய பொறுப்பில் நியமித்துள்ளது சரியாக இருக்குமா என்ற விமர்சனம் எழுந்துள்ளது. தேசிய பாதுகாப்பு இதில் அடங்கும் என்பதால் ஹெக்செத்தின் செயல்பாடுகள் கூர்ந்து கவனிக்கும்படியாக இருக்கும். உலகளாவிய போர் சூழலில் ஹெக்செத் என்ன மாதிரியான நிலைப்பாட்டுடன் செயல்படுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

டொனால்ட் ட்ரம்ப்

ட்ரம்ப் தனது கடந்த ஆட்சி காலத்தில் பாதுகாப்பு செயலாளருடன் சில முரண்பட்ட போக்குகளை கடைபிடித்துள்ளார். அதனால் இந்த முறை தனக்கு நெருக்கமானவரை அந்த பொறுப்பில் நியமிக்கலாம் என்பது அவரது எண்ணமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. பொதுவாக முக்கிய பொறுப்புகள் நியமனம் குறித்து முன்கூட்டியே தகவல்கள் வெளியாகும். ஆனால் அந்த பட்டியலில் இறுதிவரை ஹெக்செத் பெயர் அடிபடவே இல்லை. ட்ரம்ப் நியமிக்கும் வரை எங்களுக்கு அந்த எண்ணமே இல்லை. ட்ரம்பின் இந்த அறிவிப்பு அதிர்ச்சியளிப்பதாக US Senate வட்டாரங்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.