உலகம்

மன்னிப்புகளை வாரி வழங்கும் டிரம்ப்.. சம்பந்தி உட்பட 29 பேருக்கு அடித்த `லக்'!

மன்னிப்புகளை வாரி வழங்கும் டிரம்ப்.. சம்பந்தி உட்பட 29 பேருக்கு அடித்த `லக்'!

webteam

அமெரிக்க அதிபராக இருக்கும் டிரம்ப்பின் பதவிக்காலம் அடுத்த மாதம் முடிவுக்கு வருகிறது. தற்போது பதவியின் கடைசி காலக்கட்டத்தில் இருக்கும் டிரம்ப், தனது ஆதரவாளர்களுக்கு சலுகைகள் அளிக்கத் தொடங்கியுள்ளார். அதன்படி, தன் அதிகாரத்தை பயன்படுத்தி குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றவர்களுக்கு தண்டனை குறைப்பு மற்றும் மன்னிப்பு வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளார். அவரின் இந்த நடவடிக்கையால் பலன் அடைய இருப்பவர்கள் டிரம்ப்பின் சம்பந்தியும், பிரபல ரியல் எஸ்டேட் அதிபருமான சார்லஸ் குஷ்னர், டிரம்ப்பின் தேர்தல் பிரசார மேலாளர் பால் மனாஃபோர்ட், முன்னாள் ஆலோசகர் ரோஜர் ஸ்டோன் என ஒரு பெரும் பட்டாளமே உள்ளது.

டிரம்ப்பின் சம்பந்தி!

டிரம்பின் மகள் இவான்கா டிரம்பின் மாமனார் இந்த சார்லஸ் குஷ்னர். அமெரிக்காவின் பெரிய ரியல் எஸ்டேட் அதிபர். இவரின் குடும்பத்துக்கு நியூயார்க்கில் இருந்து விர்ஜினியா வரை 20 ஆயிரம் சொத்துகள் உள்ளதாக கூறப்படுவதுண்டு. இந்த சார்லஸ் குஷ்னர், வெள்ளை மாளிகையில் ஆலோசகராக பணியாற்றி இருக்கிறார். இந்த காலக்கட்டங்களில் சார்லஸ்க்கு எதிராக அவரின் மைத்துனர் வெள்ளைமாளிகை அதிகாரிகளோடு இணைந்து பணியாற்றியதால் அவரை வழிக்கு கொண்டுவர ஒரு பாலியல் தொழிலாளியை அவருடன் பழக வைத்து அவர்களின் உறவை வீடியோவாக ரெக்கார்ட் செய்து அதனை தனது சொந்த சகோதரிக்கே சார்லஸ் அனுப்பியதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இந்த விவகாரத்தில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் சார்லஸ் பொய் சொன்னது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் வரி ஏய்ப்பு, பிராசர நிதி சார்ந்த குற்றங்கள் சுமத்தப்பட்டு அவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே டிரம்ப் அதிபர் ஆனதும் இந்த சிறை தண்டனையை குறைத்து உத்தரவிட்டிருந்தார். இப்போது பதவி முடியும் தருவாயில் சார்லஸ்க்கு பொது மன்னிப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளார் டிரம்ப்.

சம்பந்திக்கு மட்டுமல்ல, டிரம்ப் அதிபராக வெற்றி பெற்றதில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் 2018ம் ஆண்டு குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டவர் பால் மனாஃபோர்ட். டிரம்ப்பின் தேர்தல் பிரசார மேலாளராக இருந்த இவருக்கு ஏழரை ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது இவருக்கும் டிரம்ப் பொது மன்னிப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளார். இந்த மன்னிப்பால் மனாஃபோர்ட் தற்போது சுதந்திர பறவையாக மாறியுள்ளார். இவர்களுடன் ஈராக் 2007 படுகொலைகளில் குற்றம்சாட்டப்பட்டு தண்டனை பெற்ற பிளாக்வாட்டர் ராணுவ ஒப்பந்ததாரர்கள் நான்கு பேர் என மொத்தம் 29 பேருக்கு மன்னிப்பு வழங்கி அதிரடி காட்டியுள்ளார் டிரம்ப். டிரம்ப்பின் அதிரடி உத்தரவால் 26 பேருக்கு முழு மன்னிப்பும், 3 பேருக்கு தண்டனை குறைப்பும் கிடைத்துள்ளது.