உலகம்

பிபிசி ஒளிப்பதிவாளர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு ட்ரம்ப் கடும் கண்டனம்

பிபிசி ஒளிப்பதிவாளர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு ட்ரம்ப் கடும் கண்டனம்

webteam

டெக்சாசில் நடந்த பொதுக்கூட்டத்தின் போது பிபிசி தொலைக்காட்சியின் ஒளிப்பதிவாளர் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு அதிபர் ட்ரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பும் விவகாரத்தில் மக்களிடையே ஆதரவு பெறும் நோக்கில் எல்லைப் பகுதியான டெக்சாஸ் மாகாணத்தில் அதிபர் ட்ரம்ப் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். இந்தச் செய்தியை சேகரிப்பதற்காக பிபிசி, சிஎன்என் உள்ளிட்ட அனைத்து ஊடகவியலாளர்களும் அங்கு குவிந்திருந்தனர். அப்போது உரையாற்றத் தொடங்கிய அதிபர் ட்ரம்ப், ஊடகங்கள் தன்னைப் பற்றி பொய்யான செய்திகளை தொடர்ந்து பதிவிட்டு வருவதாக பேசியதாக தெரிகிறது.

இந்தச் சூழலில், பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டிருந்த ட்ரம்ப் ஆதரவாளர் ஒருவர், திடீரென ஊடகவியலாளர்கள் அமர்ந்திருந்த பகுதிக்கு சென்று தாக்குதல் நடத்த முயன்றுள்ளார். அப்போது அவருக்கு நெருக்கமாக இருந்த பிபிசி ஒளிப்பதிவாளர் ஸ்கீன்ஸை பலமாக தாக்கியுள்ளார். இதில் நிலைகுலைந்த அவர் கீழே விழுந்துள்ளார்.

எதிர்பாராதவிதமாக நடந்த இந்தச் சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த ட்ரம்ப், தனது பேச்சை நிறுத்தினார். அதற்குள் விரைந்து வந்த பாதுகாவலர்கள் தாக்குதலில் ஈடுபட்ட ட்ரம்ப் ஆதரவாளரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். மேடையில் நின்றிருந்த ட்ரம்ப், ஒளிப்பதிவாளர் நலமாக இருக்கிறாரா என்பதை கேட்டு தெரிந்துக் கொண்டார். அதன் பிறகே மீண்டும் தனது உரையை தொடங்கினார்.

ஒளிப்பதிவாளர் மீது தாக்குதல் நடத்திய அந்த நபர், குடிபோதையில் இருந்ததாக ட்ரம்பின் பரப்புரை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்தச் சம்பவத்தை தொடர்ந்து ஊடகவியலாளர்களுக்கான பாதுகாப்பை சீராய்வு செய்ய வலியுறுத்தி பிபிசி சார்பில் வெள்ளை மாளிகை அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில், ஊடகவியலாளர்கள் இருக்கும் பகுதிக்கு, சாதாரணமாக சோதனைக்குப் பிறகே பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், ஆனால், சம்பவம் நடந்த அன்று, தாக்குதல் நடத்த வந்த நபரை பாதுகாவலர்கள் யாரும் தடுத்து நிறுத்தவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தச் சம்பவத்துக்கு ட்ரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், ஊடகவியலாளர்கள் உள்பட எந்தவொரு தனிப்பட்ட நபரையோ, தனிப்பட்ட அமைப்பின் மீதோ வன்முறையை கட்டவிழ்த்து விடுவது கண்டனத்துக்குரியது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.