உலகம்

முடிவுக்கு வந்தது அமெரிக்கா - சீனா வர்த்தகப் போர் !

webteam

ஜி20 உச்சிமாந‌ட்டில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும்  - சீன அதிபர் ஸி ஜின்பிங் இடையே ஏற்பட்ட பேச்சுவார்த்தையில் இருநாடுகளின் வர்த்தக பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளன.

அமெரிக்கா-சீனா இடையேயான வர்த்தக போர் கடந்தாண்டு ஜூலை மாதம் ஆரம்பித்தது. சீனாவின் நியாயமற்ற ஏற்றுமதிக் கொள்கைகளால் அமெரிக்க நலன்கள் பாதிக்கப்படுவதாக கூறி, சீனப் பொருட்களுக்கான இறக்குமதி வரியை கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உயர்த்தினார். அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் மீண்டும் வரி அதிகரிக்கப்பட்டது. இதற்குப் பதிலடியாக அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு சீனா வரியை அதிகரித்தது. இரு நாடுகள் இடையேயான இந்த வர்த்தகப் போர் தீவிரமடைந்து, உலகப் பொருளாதாரத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கியது. 

இந்நிலையில் ஜப்பானில் நடைபெற்ற ஜி 20 நாடுகளின் உச்சி மாநாட்டில் அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பும், சீனாவின் அதிபர் ஸி ஜின்பிங்கும் நடந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்கா - சீனா வர்த்தகம் தொடர்பாக உடன்பாடு எட்டப்பட்டது.‌ அதன்படி சீன நிறுவனமான ஹவாய் நிறுவனத்திற்கு ‌அமெரிக்க தொழில்நுட்ப பொருட்களை தொடர்ந்து விற்பனை செய்ய அனுமதிப்பதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 

மேலும் சீனாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தை தொடர்ந்து நடத்துவதாகவும் ஜி 20 உச்சிமாநாட்டு கூட்டத்துக்குப் பின்னர், 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள சீன இறக்குமதி பொருட்களுக்கு கூடுதல் வரி கட்டணங்களை சேர்க்காது என்றும் ‌‌அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதன் மூலம் உலகளாவிய பொருளாதார மந்தநிலைக்கு இந்தப் பேச்சுவார்த்தை எளிதாக்கும் எனத் தெரிகிறது.