உலகம்

"துரோகிகள் அப்புறப்படுத்தப்பட்டு ரஷ்யா சுத்தப்படுத்தப்படும்" - புடின் எச்சரிக்கை

"துரோகிகள் அப்புறப்படுத்தப்பட்டு ரஷ்யா சுத்தப்படுத்தப்படும்" - புடின் எச்சரிக்கை

ஜா. ஜாக்சன் சிங்

"துரோகிகளும், தாய்நாடு மீது பற்று இல்லாதவர்களும் விரைவில் அப்புறப்படுத்தப்பட்டு ரஷ்யா சுத்தம் செய்யப்படும்" என்று அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளார்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் மூன்று வாரங்களையும் கடந்து நீடித்து வருகிறது. ரஷ்ய ராணுவத்தின் தாக்குதலில் உக்ரைனில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதாகவும், லட்சக்கணக்கானோர் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளதாகவும் ஐ.நா. தெரிவித்துள்ளது. இதனிடையே, உக்ரைன் தாக்குதலுக்கு பிற நாடுகளில் மட்டுமல்லாமல் ரஷ்யாவிலும் கடும் எதிர்ப்பு காணப்படுகிறது.

ரஷ்யாவின் பல்வேறு நகரங்களில் நாள்தோறும் உக்ரைன் போருக்கு எதிராக போராட்டங்களும், ஆர்ப்பாட்ட பேரணிகளும் நடந்த வண்ணம் உள்ளன. பலர் ரஷ்ய அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்து, வீடியோவும் வெளியிட்டு வருகின்றனர். இதுபோன்ற நபர்களை ரஷ்யா கடுமையாக தண்டித்து வருவதாகவும் மேற்கத்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தொலைக்காட்சியில் இன்று தோன்றி மக்களிடையே உரையாற்றினார். அப்போது அவர், "ரஷ்ய மக்களால் எப்போதுமே தேசப் பற்றாளர்களையும், துரோகிகளையும் பிரித்தறிய முடியும். அதுபோன்ற துரோகிகளை, வாய்க்குள் சென்ற சிறு பூச்சியை போல மக்கள் உமிழ்ந்து விடுவார்கள். தேச துரோகிகளையும், நாட்டுப் பற்று இல்லாதவர்களையும் அப்புறப்படுத்துவதன் மூலம் ரஷ்யாவை சுத்தம் செய்ய முடியும் என நம்புகிறேன். விரைவில் அந்தப் பணி தொடங்கும்" எனக் கூறினார்.

விளாடிமிர் புடினின் இந்த பேச்சானது, ரஷ்ய அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்து வருபவர்களுக்கான எச்சரிக்கை என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன.