மொரீஷியஸ் தீவுக்கடியில் கண்டம் மறைந்ததற்கான தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது.
பூமி நிலம் மற்றும் கடலால் ஆனது. இந்த நிலங்களை தான் கண்டங்களாக பிரித்துள்ளனர். கண்டங்கள் சமுத்திரங்களை விட முந்தைய காலத்தில் தோன்றியவை. காரணம் கண்டங்களில் 4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக உள்ள பாறைகள் காணப்படுகிறது. ஆனால் சமுத்திரங்களில் இதைப் போன்று இல்லை.
மொரீஷியஸ் தீவு கடந்த 9 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக தோன்றியிருக்கலாம் என கூறப்படுகிறது. காரணம், அத்தகைய தீவில் 9 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக உள்ள எந்தவொரு பாறைகளும் காணப்படுவதில்லை. ஆனால் தற்போது மொரிஷீஸ் தீவில் சிர்கான்ஸ் எனப்படும் கனிம பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது 3 பில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தை சேர்ந்தது. 9 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக தோன்றியதாக கூறப்படும் மொரீஷியஸ் தீவில், 3 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக உள்ள கனிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மொரீஷியஸ் தீவுக்கடியில் கண்டம் மறைந்ததற்கான தடயங்கள் தெரியவந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக இருந்த கோண்ட்வானா மகா கண்டத்தின் ஒரு பகுதியாக இந்த கண்டம் இருந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.