உலகம்

சிறிசேனாவை சந்தித்த தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவர் - ராஜபக்சவுக்கு ஆதரவா?

சிறிசேனாவை சந்தித்த தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவர் - ராஜபக்சவுக்கு ஆதரவா?

rajakannan

இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேனவை சந்தித்துள்ள தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், ராஜபக்ச அரசில் இணையப் போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இலங்கையின் புதிய பிரதமராக ராஜபக்ச நியமிக்கப்பட்டதை அடுத்து, அந்நாட்டு அரசியலில் குழப்பம் நீடித்து வருகிறது. வரும் 14 ஆம் தேதி நாடாளுமன்றம் கூடும்போது, குழப்பமான நிலை மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

14 ஆம் தேதி நாடாளுமன்றம் கூடும் போது, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டால், ராஜபக்ச பெரும்பான்மையை நிரூபிக்க நேரிடலாம் எனக் கூறப்படுகிறது. எனவே தேவையான எம்.பி.,க்களை தங்கள் வசம் இழுக்க ராஜபக்ச தரப்பு முயன்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே சமயம் தனது தரப்புக்குத் தான் பெரும்பான்மை பலம் இருப்பதாக பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க தெரிவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேனவை தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் இன்று சந்தித்தார். இதனால், அணி மாறுவதற்கான வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது.

இந்நிலையில், ராஜபக்ச அரசில் இணையப் போவதில்லை என திட்டவட்டமாக மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இது குறித்து மனோ கணேசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அதிபர் மைத்ரிபால சிறிசேனவை தமிழ் முற்போக்கு கூட்டணியின் 6 எம்.பி.க்களும் நேரில் சந்தித்து, தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து விவாதித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

அப்போது ராஜபக்ச அரசில் இணைய வேண்டும் என அதிபர் விடுத்த அழைப்பை அனைவரும் ஒருசேர நிராகரித்து விட்டு வந்ததாக அந்தப் பதிவில் அவர்‌ குறிப்பிட்டுள்ளார்.