இலங்கையில் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், அந்த நாட்டைச் சேர்ந்த உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் வீரர்கள் குரல் கொடுத்திருப்பது கவனம் பெற்றுள்ளது.
சுற்றுலாத்துறை முடக்கம், பணவீக்கம் உள்ளிட்ட காரணங்களால், இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இலங்கையின் இந்த பொருளாதார நெருக்கடிக்கு அதிபர் கோட்டாபயவின் தவறான கொள்கைகளே காரணம் எனக் கூறி, அந்நாடு முழுவதும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், சீரழிந்த பொருளாதாரத்தை சீர்தூக்க முடியாமல் தவிக்கும் அதிபர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும் அவர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், சுயநலத்தை கைவிட்டுவிட்டு மக்கள் நலனுக்காக பாடுபட வேண்டும் என்றும், போராட்டம் நடத்தும் மக்களின் குரலுக்கு செவி சாய்க்க வேண்டும் என்றும், மக்களை எதிரிகளாக பார்க்கக் கூடாது என இலங்கை அரசு குறித்த விமர்சனங்கள், அறிவுத்தல்கள் வலுப்பெற்று வருகின்றன.
ராஜபக்ச குடும்பத்தினரின் அரசு மீது இந்த முறை இக்கருத்துகளைக் கூறியது இலங்கையின் எதிர்க்கட்சிகளல்ல. அந்நாட்டு கிரிக்கெட் வீரர்கள். இலங்கையின் முன்னாள் மற்றும் தற்போதைய கிரிக்கெட் வீரர்களும் அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். மக்களை எதிரிகளாக பார்க்காமல் அவர்களின் குரலுக்கு செவி சாய்த்து தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் சங்ககாரா தெரிவித்துள்ளார்.
உரிமைகளுக்காக போராடி வரும் மக்களைக் கைது செய்வது சரியல்ல என்றும், அவர்களை துன்பங்களில் இருந்து அவசரமாக பாதுகாக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை அணி முன்னாள் கேப்டன் மகேல ஜெயவர்த்தன கூறியுள்ளார். இலங்கையின் தற்போதைய பிரச்னைகள் அனைத்தும் மனிதர்களால் உருவானவையே என்றும், அதை சரியான நபர்களால்தான் தீர்க்க முடியும் என்றும் ஜெயவர்த்தனே கூறியுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணி கேப்டன் திமுத் கருணாரத்னேவும் போராட்டக்களத்தில் இறங்கியுள்ளார். இலங்கை அணியின் முன்னாள் வீரர்களான லசித் மலிங்கா, ரோஷன் மகாநமா, மர்வான் அட்டபட்டு ஆகியோரும் அரசுக்கு எதிராக களம் இறங்கியுள்ளனர். ஐபிஎல்லில் விளையாடி வரும் இலங்கை வீரர்கள் வனிந்து ஹசரங்கா, பானுகா ராஜபக்ச ஆகியோரும் தங்கள் நாட்டு மக்களுக்காக குரல் கொடுத்துள்ளனர்.