1. சோகத்தில் முடிந்த நீர்மூழ்கி கப்பல் பயணம்
டைட்டானிக் கப்பலின் சிதைந்த பாகங்களை காண கனடாவில் இருந்து கடந்த 16ம் தேதி கடலுக்குள் சென்ற மினி நீர்மூழ்கி கப்பல் மாயமானது. கனடா, அமெரிக்க கடலோர காவல்படையினர் மாயமான நீர்மூழ்கி கப்பலை தேடும் பணியில் இரவுப்பகலாக ஈடுபட்டனர். நீர்மூழ்கி கப்பலில் கொண்டு செல்லப்பட்ட ஆக்சிஜன் தீர்ந்து விடும் என்பதால் அதில் பயணம் செய்த 5 பேரையும் உயிருடன் மீட்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் நீர்மூழ்கி கப்பல் வெடித்துச் சிதறியதில் அதில் பயணித்த 5 பேரும் உயிரிழந்து விட்டதாக அமெரிக்க கடலோர காவல்படை அறிவித்தது.
2. பிரதமர் மோடி எகிப்து பயணம்
4 நாள் அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் நரேந்திர மோடி எகிப்து நாட்டுக்கு சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. எகிப்தின் உயரிய விருதான ‘ஆர்டர் ஆஃப் தி நைல்’ விருதினை பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அதிபர் அப்தெல் ஃபட்டா வழங்கினார்.
3. இந்தியா - அமெரிக்கா கூட்டறிக்கை
சா்வதேச விதிகளை அனைத்து நாடுகளும் மதித்து நடந்து கொள்ள வேண்டும் எனக் கூட்டறிக்கையில் இந்தியாவும் அமெரிக்காவும் வலியுறுத்தியுள்ளன. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அத்துமீறலில் ஈடுபட்டு வரும் சீனாவுக்கான மறைமுக எச்சரிக்கையாக இது பாா்க்கப்படுகிறது.
4. ரஷ்யாவுக்கு புதிய சிக்கல்
உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்ய பாதுகாப்பு படையினருடன் இணைந்து செயல்பட்ட 'வாக்னர்' எனப்படும் தனியார் ராணுவ அமைப்பு, ரஷ்யாவிற்கு எதிராக திரும்பி உள்ளது. இதையடுத்து 'வாக்னர்' அமைப்பின் தலைவர் யெவ்ஜெனி புரிகோஸை கைது செய்யவும் கிளர்ச்சியாளர்களை கண்டதும் சுடவும் ரஷ்யா அரசு உத்தரவிட்டதாக தகவல் வெளியானது. 'வாக்னர் அமைப்பின் இந்த செயல் மிகப்பெரிய தேசத்துரோகம்' என ரஷ்ய அதிபர் புதின் கண்டனம் தெரிவித்து இருந்தார். மாஸ்கோ நோக்கி வாக்னர் குழு முன்னேறும் என்று பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், பெலாரஸ் அதிபரின் உதவியுடன் ஒரே நாளில் இந்த பிரச்னையை முடிவுக்கு கொண்டு வந்தார் அதிபர் புடின்.
5. எச்-1பி விசாவை அமெரிக்காவிலேயே புதுப்பிக்கலாம்
அமெரிக்காவில் வேலை செய்ய இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டினருக்கு வழங்கப்படும் எச்-1பி வகை விசாவை புதுப்பிப்பதற்காக அமெரிக்காவை விட்டு வெளியேறும் நிலையை அமெரிக்கா தற்போது மாற்றி அமைத்துள்ளது. இனி அமெரிக்காவிலேயே அங்குள்ள தூதரகம் சென்று விசாவை புதுப்பிக்க வழி செய்யப்பட்டு உள்ளது.
6. ட்விட்டர் விவகாரத்தில் எலான் மஸ்க் விளக்கம்
சில ட்விட்டர் கணக்குகளை முடக்க இந்திய அரசு தனக்கு அழுத்தம் கொடுத்ததாக ட்விட்டர் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஜாக் டொர்சி குற்றஞ்சாட்டிய நிலையில், அதற்கு ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் விளக்கம் கொடுத்துள்ளார். உள்நாட்டு சட்டத் திட்டங்களை பின்பற்றுவதை தவிர ட்விட்டருக்கு வேறு வழியில்லை என்றும் சட்டப்படி கருத்து சுதந்திரத்தை சிறந்த முறையில் அளிக்க நாங்கள் எங்களால் முயன்ற முயற்சிகளை மேற்கொள்வோம் என்றும் எலான் மஸ்க் கூறினார்.
7. 41 பெண் கைதிகள் படுகொலை
மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராஸில் உள்ள சிறையில் மகளிர் கைதிகள் இடையே திடீரென வன்முறை ஏற்பட்டது. குழுக்களாக பிரிந்து மோதி கொண்ட இந்த சம்பவத்தில் 41 கைதிகள் கொலை செய்யப்பட்டனர்.
8. இம்ரான் கானுக்கு பிடிவாரண்டு
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது ஊழல், பணமோசடி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், இம்ரான்கான் உள்ளிட்ட அவரது கட்சி தலைவர்களுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து லாகூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
9. இந்தியாவின் தீர்மானத்தை தடுத்த சீனா
மும்பை தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்டதற்காக தேடப்பட்டு வந்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி சஜித் மிரை, சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க வேண்டும் என்ற இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஐ.நா.சபையில் கொண்டு வந்த தீர்மானத்தை நிறைவேற்ற விடமால் சீனா தடுத்து நிறுத்தியது.
10. உருகுவேயில் அவசரநிலை
கடுமையான வறட்சி காரணமாக தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதால் உருகுவே நாட்டின் தலைநகர் மற்றும் மாநகரப் பகுதிகளில் அவசரநிலை பிரகடனம் செய்யப்படுவதாக அந்நாட்டு அதிபர் லுய்ஸ் லக்கால்லே போவ் அறிவித்துள்ளார்.