கனடாவில் வசித்து வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரபல டிக்டாக் ஸ்டார் மேகா தாக்கூர் திடீரென உயிரிழந்த சம்பவம் அவரது ஃபாலோயர்ஸ்களை பெரும் கவலையில் ஆழ்த்தியிருக்கிறது. மேகாவின் மறைவுக்கு இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
மேகா ஒரு வயதாக இருக்கும் போது இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் இருந்து அவரது குடும்பம் கனடா நாட்டிற்கு புலம்பெயர்ந்திருக்கிறது. கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில்தான் மேகாவும் அவரது குடும்பத்தினரும் வசித்து வந்திருக்கிறார்கள்.
மெலிதான உடல்வாகு கொண்டதால் பள்ளிப்படிப்பின் போது மேகாவை அவரது சக மாணாக்கர்கள் கேலி கிண்டல் செய்திருக்கிறார்கள். இதனால் மனதளவில் பாதிக்கப்பட்ட மேகா, தன்னை தானே தேற்றிக் கொண்டு வாழ்ந்து வந்திருக்கிறார்.
டிக் டாக் சமூக வலைதளத்தில் பெண்களுக்கும் மற்றவர்களுக்கும் முன்னாதரணமாக பல தன்னம்பிக்கை நிறைந்த பதிவுகளை இடுவதை வழக்கமாக கொண்டிருந்த மேகாவுக்கு கிட்டத்தட்ட 9 லட்சத்துக்கும் மேலான ஃபாலோயர்ஸ் இருந்திருக்கிறார்கள்.
வெறும் 21 வயதே ஆன மேகா திடீரென கடந்த நவம்பர் 24ம் தேதி உயிரிழந்துவிட்டதாகக் குறிப்பிட்டு அவரது பெற்றோர் மேகாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்திலேயே பதிவிட்டிருக்கிறார்கள்.
அதில், "எங்கள் வாழ்க்கையின் ஒளியான, அன்பான, அக்கறையுள்ள, அழகான மகள் மேகா, நவம்பர் 24, 2022 அன்று அதிகாலையில் திடீரென எதிர்பாராதவிதமாக காலமானார் என்பதை கனத்த இதயங்களுடன் அறிவிக்கிறோம்." எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இதனைக் கண்டு கடும் அதிர்ச்சிக்கு ஆளான மேகாவின் ஃபாலோயர்ஸ் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பதிவிட்டு வருகிறார்கள். மேகாவின் இறப்புக்கு என்ன காரணம் என அவர்களது பெற்றோர் தரப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் கார் விபத்தில் மேகா இறந்ததாக சில தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.