உலகம்

ஈபிள் டவரிலிருந்து கம்பி வழியே பறக்கலாம்! சுற்றுலா பயணிகளுக்கு சிறப்பு வசதி

ஈபிள் டவரிலிருந்து கம்பி வழியே பறக்கலாம்! சுற்றுலா பயணிகளுக்கு சிறப்பு வசதி

webteam

ஈபிள் டவரிலிருந்து கம்பி வழியே பறந்து சென்று, பாரீஸ் நகரத்தின் அழகை கண்டு ரசிப்பதற்கு சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. 

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் அமைந்துள்ள ’ஈபிள் டவர்’ உலக சுற்றுலா தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது. கடந்த 1889 ஆம் ஆண்டு  ஈபிள் டவர் திறந்து வைக்கப்பட்டது.

1887 ஆம் ஆண்டு ஈபிள் டவரை வடிவமைக்க தொடங்கப்பட்ட கட்டுமான பணிகள் சுமார் 2 ஆண்டுகள் 2 மாதங்கள் மற்றும் 5 நாட்களுக்கு பிறகு தான் முடிவு பெற்றதாக கூறப்படுகிறது. சுமார் 10 ஆயிரம் டன் எடைக்கொண்ட ஈபிள் டவர், 324 மீட்டர் உயரம் கொண்டது. ஈபிள் டவர் தொடங்கப்பட்டதிலிருந்து தொடர்ந்து 41 வருடங்களாக உலகிலேயே மிக உயர்ந்த கட்டிடம் அல்லது கோபுரம் என்ற பெருமையை பெற்றது.


இந்நிலையில் ஈபிள் டவர் கட்டப்பட்டு 130 ஆண்டுகள் நிறைவுறும் நிலையில் பாரீஸ் நகரத்தின் அழகை கண்டுகளிக்கும் வகையில் பிரத்யேக வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

அதன்படி ஈபிள் டவரின் மேல் தளத்திலிருந்து, 800 மீட்டர் தொலைவில் உள்ள 18-வது நூற்றாண்டில் கட்டப்பட்ட ராணுவ அலுவலகம் வரை கம்பி கட்டப்‌பட்டுள்ள‌து. கம்பியில் பொருத்தப்பட்ட பெல்ட்டில் அமர்ந்து கொண்டு கம்பி வழியே பறந்து சென்று, பாரீஸ் நகரை ‌காணலாம். இந்த வசதி பொதுமக்களுக்கு இலவசமாக அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான தேர்வு சமூகவலைத்தளங்கள் மூலம் நடத்தப்படுகிறது. ஈபிள் கோபுரம் கட்டப்பட்டு 130 ஆண்டுகள் நிறைவுறும் நிலையில், ஜூன் 2 ஆம் தேதி வரை இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கம்பி வழியே பறந்து சென்று பாரீஸை ரசிக்கும் இந்த வசதி புதிய முறை அல்ல. இதேபோல்  2017ம் ஆண்டு சிறப்பு வசதி ஏற்படுத்தப்பட்டு சுற்றுலா பயணிகள் பாரீஸை கண்டுகளித்தனர்.