உலகம்

'மூன்று விரல்' புரட்சி... போராடும் மியான்மர் மக்களின் சைகை... ஏன், எதற்கு, எப்படி?

'மூன்று விரல்' புரட்சி... போராடும் மியான்மர் மக்களின் சைகை... ஏன், எதற்கு, எப்படி?

webteam

மியான்மரில் ஆங் சான் சூச்சி தலைமையிலான அரசாங்கம் பிப்ரவரி 1-ம் தேதி கவிழ்க்கப்பட்டு, ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டது. அதிகாரம் ராணுவத்திற்கு கைமாறியதையடுத்து, அங்கு போராட்டங்கள் வெடித்துள்ளன.

இந்த ஆர்பாட்டங்களின்போது, ஜனநாயக சக்திகள் வெளிப்படுத்தும் 'மூன்று விரல்' வணக்கம் அனைவரையும் கவர்ந்துள்ளது. அது என்ன மூன்று விரல் வணக்கம் என்று பலரும் தங்கள் சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர். மூன்று விரல் வணக்கமும் எதிர்ப்பின் அடையாளமாக முன்னிறுத்தப்படுகிறது. குறிப்பாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அண்டை நாடான தாய்லாந்தில் மன்னர் மஹா வஜிரலோங்க்கார்னின் முடியாட்சிக்கு எதிரான போராட்டங்களிலும் இந்த மூன்று விரல் வணக்கத்தை காண முடிந்தது.

மூன்று விரல் வணக்கம் என்றல் என்ன?

பிரபல அமெரிக்க எழுத்தாளர் சுசேன் காலின்ஸின் ஹங்கர் கேம்ஸ் புத்தகம் மற்றும் அவரது படங்களின் மூலமாக இந்த மூன்று விரல் சைகை அறிமுகப்படுத்தப்பட்டது. மியான்மரில் ஆட்சி கவிழ்ப்பை எதிர்த்து, மருத்துவ ஊழியர்களால் இந்த சைகையானது முதல் முதலில் பயன்படுத்தப்பட்டது. பின்னர் அதை அடியொற்றி இளைஞர்கள் பின்பற்ற தொடங்கினர். தொடர்ந்து திங்களன்று யாங்கோனில் (Yangon) நடைபெற்ற மிகப்பெரிய ஆர்பாட்டத்தில் மூன்று விரல் வணக்கம் சைகையை அம்மக்கள் பயன்படுத்தினர். சுசேன் காலின்ஸின் ஹங்கர் கேம்ஸ் படத்தில் பிரசிடென்ட் ஸ்னோ என்பவரின் கொடூங்கோல் ஆட்சிக்கு எதிராக மக்கள் ஒன்று திரண்டு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துவர்.

அப்போது, அவர்கள் மூன்று விரல் சல்யூட்டை பயன்படுத்தும் காட்சி அதில் இடம்பெற்றிருக்கும். உண்மையில் மூன்றுவிரல் சல்யூட்டின்போது, கட்டை விரல் சுட்டுவிரலை பிடித்துக்கொண்டிருக்கும். இது ஒடுக்கப்பட்ட மக்களின் ஒற்றுமையை வெளிப்படுத்துகிறது எனவும், மற்ற உயர்ந்து நிற்கும் மற்ற மூன்று விரல்களும் எழுச்சியை பறைசாற்றும் வகையில் அமைந்திருப்பதாகவும் மூன்று விரல் வணக்கத்திற்கு விளக்கம் அளிக்கப்படுகிறது. படங்களில் ஜெனிபர் லாரன்ஸ் நடித்த காட்னிஸ் எவர்டீன் என்ற கதாபாத்திரத்தால் இந்த சைகை பிரபலப்படுத்தப்பட்டது.

<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">The Revolution Is About All Of Us. Share your own 3-finger salute using hashtag <a href="https://twitter.com/hashtag/Unite?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Unite</a>. <a href="http://t.co/QoidZH4tal">pic.twitter.com/QoidZH4tal</a></p>&mdash; The Hunger Games ? (@TheHungerGames) <a href="https://twitter.com/TheHungerGames/status/611579079741931520?ref_src=twsrc%5Etfw">June 18, 2015</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

2021 பிப்ரவரி 10, புதன்கிழமை, மியான்மரில் உள்ள மாண்டலேயில் நடந்த ஒரு போராட்டத்தின்போது ராணுவ சதித்திட்டத்திற்கு எதிராக காவலில் வைக்கப்பட்ட மியான்மர் தலைவர் ஆங் சான் சூச்சி, எதிர்ப்பின் அடையாளமாக மூன்று விரல் வணக்கங்களை போராட்டக்காரர்களுக்கு காட்சிப்படுத்தினார். தென்கிழக்கு ஆசியாவில் 2014-ம் ஆண்டு இந்த சைகை ஆட்சிக் கவிழ்ப்புக்கான எதிர்ப்பு அடையாளமாக மாறியது. அப்போது தாய்லாந்தில் இளைஞர்கள் இணைந்து ஷாப்பிங் மால் முன் கூடி ராணுவத்திற்கு எதிரான தங்கள் எதிர்ப்பைக் காட்டினர். அப்போது இளைஞர் ஒருவர், மூன்று விரல் வணக்கத்திற்காக கையை உயர்த்தியபோது, போராட்டத்தில் ஈடுபட்ட மற்றவர்களும் அதை அப்படியே பின்தொடர்ந்தனர். இப்படியாக மூன்று விரல் வணக்கம் மெதுவாக எதிர்ப்பின் அடையாளமாக பரவத் தொடங்கியது.

எந்தவித கூச்சல் கூப்பாடும் இல்லாமல், அமைதியான வழியில் எதிர்ப்பின் புதிய வடிவமாக மூன்று விரல் வணக்கம், சர்வாதிகார எதிர்ப்பு என்ற செய்தியை சொல்லியது. தொடர்ந்து தாய்லாந்தில் நடந்த அனைத்து பேரணிகளிலும் இந்த மூன்று விரல் வணக்கமே பிரதானப்படுத்தப்பட்டது. மக்களின் எழுச்சியைக் கண்ட தாய்லாந்து ராணுவம், மூன்றுவிரல் வணக்கம் சைகையை தடை செய்தது. இதுவே இதன் வெற்றியாக பார்க்கப்பட்டது. தடை இருந்தபோதிலும் 2014ம் முதல் இன்று வரை தாய்லாந்து முழுவதும் இந்த சல்யூட் சைகை பின்பற்றப்பட்டு வருகிறது. 2014ம் ஹாங்காங்கில் நடந்த குடை புரட்சியிலும் இந்த சைகையை காண முடிந்தது.

2010ம் ஆண்டு மியான்மரில் ஜனநாயக சீர்திருத்தங்கள் தொடங்கிய நிலையில், இணைய பயன்பாடானது அந்நாட்டில் அதிகரிக்க தொடங்கியது. இது அந்நாட்டிலுள்ள புதிய தலைமுறையினர் பல்வேறு நாட்டு கலாசாரத்தை அறிந்துகொள்ளவதற்கு வழிவகுத்தது. அந்த வகையில் மூன்று விரல் சைகையானது மீம்ஸ்களாகவும் தங்களின் எதிர்ப்பின் அடையாளமாகவும் இணையத்தில் அந்நாட்டு இளைஞர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.