உலகம்

துருக்கி: 1,000-க்கும் அதிகமான ஃபிளமிங்கோ பறவைகள் இறப்பு

துருக்கி: 1,000-க்கும் அதிகமான ஃபிளமிங்கோ பறவைகள் இறப்பு

JustinDurai
துருக்கியின் கொன்யா பகுதியில் ஆயிரத்திற்கும் அதிகமான ஃபிளமிங்கோ பறவைகள் இறந்திருப்பது, பறவை ஆர்வலர்களையும், சூழலியலாளர்களையும் அதிர வைத்திருக்கிறது.
துருக்கியின் கொன்யா பகுதியில் உள்ள டஸ் ஏரி அந்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய ஏரியாகும். உவர் நீர் ஏரியான இங்கு ஏராளமான வலசைப்பறவைகள் வந்து செல்வது வழக்கம். வறண்டு கிடக்கும் இந்த ஏரியில் கடந்த இருவாரகாலமாக ஆயிரத்திற்கும் அதிகமான பிளமிங்கோ பறவைகள் இறந்து கிடக்கின்றன.
டஸ் ஏரிக்கு நீர்வரக்கூடிய பகுதிகளை தடுத்து தங்கள் பகுதிக்கு பாசனத்திற்காக சிலர் தண்ணீரை திருப்பிக் கொண்டதால், ஏரிக்கு தண்ணீர் வராமல் வறண்டு போயிருப்பதாக சூழலியலாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக ஏரி தண்ணீரிலும் உவர் தன்மை பெரிதும் அதிகரித்து, பறவைகளை பறக்க விடாமல் அவற்றின் உயிரை பறித்திருக்கலாம் என்று Selcuk பல்கலைக்கழகத்தில் உயிரியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பாசனத்திற்கான தண்ணீர் கொள்கையை தங்கள் வசதிக்கேற்ப மாற்றிக்கொள்வதால், ஏதுமறியா பிளமிங்கோ பறவைகள்  இரையாகிக் கொண்டிருக்கும் பரிதாபம் நிகழ்ந்து வருவதாக குற்றம்சாட்டுகிறார்கள் சூழலியாளர்கள்.
இயற்கையை மனிதர்கள் தங்கள் வசதிக்கு ஏற்றபடி வளைப்பதன் விபரீதங்கள், மீண்டும் மனிதகுலத்துக்குத்தான் அபாயமாக திரும்புவதைத்தான், "காலம் " நமக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறது. இதுவும் அப்படியொரு விபரீதத்துக்கான வித்தே.