உலகம்

எவை எல்லாம் உலகின் மிகச்சிறந்த விமான சேவை நிறுவனங்கள் ?

jagadeesh

உலகின் மிகச்சிறந்த விமான சேவை நிறுவனங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. 6-ஆவது முறையாக ஏர் நியூசிலாந்து இந்தப் பட்டியலில் முதலிடத்தை தக்க வைத்துள்ளது.

சர்வதேச அளவில் பல்வேறு விமான நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு சேவைகளை வழங்கி வருகின்றன. விமான நிறுவனங்களின் தரம், பயணிகளை கையாளும் விதம், விமானத்தில் உள்ள வசதிகள் மற்றும் பாதுகாப்பு, ஊழியர்கள் மற்றும் பயணிகளின் கருத்துகள், எவ்வளவு எரிபொருளை மிச்சப்படுத்துகின்றன என்பன உள்ளிட்ட 12 அம்சங்கள் கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன. அதனை அடிப்படையாக கொண்டு ஏர்லைன்ரேட்டிங்ஸ் டாட்காம் நிறுவனம், உலகின் மிகச்சிறந்த விமான சேவை நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. 

இதில் ஏர் நியூசிலாந்து முதலிடத்தை தக்க வைத்துள்ளது. 6ஆவது முறையாக இந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ள ஏர் நியூசிலாந்து, அனைத்து பிரிவுகளிலும் சிறப்பாக செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் கடந்த ஆண்டு முதலிடத்தில் இருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இரண்டாமிடத்தை பிடித்துள்ளது. மிக ஆடம்பரமான மற்றும் அதிநவீன வடிவம் கொண்டவை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜப்பானின் ஆல் நிப்பான் ஏர்வேஸ் நிறுவனம் இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. நான்காவது இடத்தை பிடித்துள்ள ஆஸ்திரேலியாவின் quantas, நிறுவனம் சிறந்த உள்நாட்டு சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் சிறந்த ஓய்வறைகளை கொண்ட நிறுவனமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

எமிரேட்ஸ் விமான நிறுவனம் சிறந்த பொழுதுபோக்கு சேவை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகளுக்கு சிறப்பான வசதிகளை செய்து தரும் நிறுவனமாக தேர்வாகியுள்ள விர்ஜின் ஆஸ்திரேலியா சிறந்த பணியாளர்கள் கொண்ட நிறுவனமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. குறைந்த செலவில் நிறைவான சேவையை வழங்கும் நிறுவனமாக வியட்நாமின் Viet JetAir தேர்வாகியுள்ளது. இந்தியாவில் சேவை வழங்கும் எந்த நிறுவனமும் முதல் 10‌ இடங்களில் இடம்பிடிக்கவில்லை.