உலகம்

இரண்டு உலகப்போர்களை பார்த்தவர்.. உலகின் மிகவும் வயதான பெண்மணி மரணம்!

இரண்டு உலகப்போர்களை பார்த்தவர்.. உலகின் மிகவும் வயதான பெண்மணி மரணம்!

webteam

உலகின் மிகவும் வயதான நபரான ஃபிரான்ஸைச் சேர்ந்த லூசில் ராண்டன் பெண்மணி தன்னுடைய 118 வயதில் மரணமடைந்தார்.

ஃபிரான்ஸைச் சேர்ந்த லூசில் ராண்டன், 1904ஆம் ஆண்டு பிப்ரவரி 11ஆம் தேதி பிறந்தவர். தனது 26வது வயதில் கத்தோலிக்க கிறிஸ்தவராக மாறி ஞானஸ்தானம் பெற்றார். 1944 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போர் சமயத்தில் தனது 41வது வயதில் கன்னியாஸ்திரியானார். அப்போது தன் பெயரை ஆண்ட்ரே என மாற்றிக் கொண்டார்.

இரண்டாம் உலகப் போரின்போது குழந்தைகளை பராமரித்து வந்த இவர், 28 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவமனையில் முதியோர் மற்றும் ஆதரவற்றோரை பராமரிப்பதில் செலவிட்டார். ஸ்பானிஷ் காய்ச்சல், கொரோனா என இரண்டு பெருந்தொற்றுகளையும் சமாளித்து மீண்டு வந்த ராண்டன், தன்னுடைய 118 வயதில் உயிரிழந்திருப்பது அங்குள்ள மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து அவரது செய்தித் தொடர்பாளர் டேவிட் டவெல்லா, ”இது பெரும் சோகத்தை அளித்துள்ளது. ஆனால் இதைத்தான் கன்னியாஸ்திரி ஆண்ட்ரே விரும்பினார். தனது அன்பான சகோதரனுடன் சேர வேண்டும் என்பது அவருடைய ஆசை. அவரைப் பொறுத்தவரை, இது அவருக்கு கிடைத்த சுதந்திரம்” என்று தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு (2022) ஏப்ரல் 19ஆம் தேதி, கானே டனகா என்ற ஜப்பனிய பெண், தன்னுடைய 119 வயதில் இறந்தபிறகு ராண்டன் உலகின் மிக வயதான நபராக அறியப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

- ஜெ.பிரகாஷ்