ஹென்றி ஏர்ல் ட்விட்டர்
உலகம்

உலகில் அதிக முறை கைதான போதை ஆசாமி.. 6,000 நாட்கள் சிறைவாசம்.. அமெரிக்க நபருக்கு நேர்ந்த சோகம்!

Prakash J

அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தைச் சேர்ந்தவர் ஹென்றி ஏர்ல் (74). ஹென்றிக்கு 18 வயது இருக்கும்போது, அவரை தத்தெடுத்து வளர்த்த தாய் மரணம் அடைந்துவிட்டார். இந்த துக்கத்தில் ஹென்றி மதுபானம் குடிக்கத் தொடங்கினார். அவர் எங்கும் முறையாக வேலை செய்ததில்லை. ஒரேயொரு முறை மோட்டல் ஒன்றில் வேலை செய்துள்ளார். அப்போதும், அவர் குடிகாரர் என தெரிந்ததும் வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். 20 வயது இருக்கும்போது ஆயுதம் ஒன்றை மறைத்து எடுத்துச் சென்றதற்காக, ஹென்றி 1970-ஆம் ஆண்டு ஜூலையில் பயேட் கவுன்டி பகுதியில் முதன்முறையாக அவர் கைதுசெய்யப்பட்டார்.

இப்படி சிறுசிறு வழக்குகளுக்காக தொடர்ந்து கைதுசெய்யப்பட்டு வந்த அவர், 1000-ஆவது முறையாக 2008-ஆம் ஆண்டு அவர் கைதுசெய்யப்பட்டார். யாரோ ஒருவரின் வீட்டுக்குப் பின்னால் மதுபோதையில் சிறுநீர் கழித்த காரணத்திற்காக இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது. பின்னர், புனரமைப்பு இல்லத்தில் சேர்க்கப்பட்டு தெளிவடைந்த அவர், 4 மாதங்களுக்குப் பின் மீண்டும் கைதுசெய்யப்பட்டார்.

இதையும் படிக்க: உ.பி.| 7 வயதில் கடத்தப்பட்ட சிறுவன்.. தாயை பிரிந்து திசைமாறிய வாழ்க்கை; 22 வருட பாசப்போராட்டம்!

எனினும், 5 தசாப்தங்களில், 1,500 முறை அவர் கைதுசெய்யப்பட்டு உள்ளார் என அந்நாட்டு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. கடைசியாக, 2017-ஆம் ஆண்டு ஏப்ரலில் அவர் கைது செய்யப்பட்டார். பெரும்பாலும் அவரது கைதுகள் அனைத்தும் மதுபோதை காரணமாகவே நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

இதன்மூலம், உலகில் அதிக முறை கைது செய்யப்பட்ட நபர் என அமெரிக்காவில் பிரபலமடைந்த அவர், சிறையில் மொத்தம் 6 ஆயிரம் நாட்களை கழித்துள்ளார். அவருக்கென்று குடும்பம் என எதுவும் இல்லாமல் வாழ்ந்து வந்த அவர், கடந்த சில நாட்களுக்கு முன் உயிரிழந்தார். அவரை பற்றி உள்ளூர்வாசிகள், ”அவர் ஒரு வசீகரிக்கக்கூடிய நபர்; சமூக விதிகளை பற்றி எல்லாம் அவர் கவலை கொள்ளாமல் சுதந்திர மனப்பான்மையுடன், தான் விரும்பியவற்றை மகிழ்ச்சியுடன் செய்யக்கூடியவர்” எனத் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க: Gpay, PhonePe-க்கு போட்டியாக Paytm நிறுவனத்தை வாங்கும் அதானி?