உலகம்

"எங்க ஊரு பொண்ணுதாம்பா அமெரிக்க துணை அதிபரு"-கெத்து காட்டும் கிராமத்து மக்கள்

kaleelrahman

அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றதைத்தொடர்ந்து அவரது முன்னோர்கள் வாழ்ந்த பைங்காநாடு துளசேந்திரபுரம் கிராமத்து மக்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் வாசலில் வாழ்த்து கோலமிட்டும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். 


உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்த அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த 2ஆம் தேதி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்ற நிலையில் அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார் என்பதை தெரிந்து கொள்ள உலகமே ஆவலுடன் காத்திருந்தது.

இந்நிலையில் ஓட்டு எண்ணிக்கையின் ஆரம்பம் முதலே ஜோ பைடனின் கையே ஓங்கியிருந்தது. இதைத்தொடர்ந்து அதிபர் ட்ரம்ப் வாக்கு எண்ணிக்கையில் தவறு நடந்திருப்பதாக நீதிமன்றத்தை நாடினார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் அமெரிக்காவின் அதிபராகவும் துணை அதிபராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ்ம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 


இந்நிலையில் தமிழகத்தில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரம் கிராமம் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. கமலா ஹாரிஸ் துணை அதிபர் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என கிராம மக்கள் ஒன்றிணைந்து அவரது குலதெய்வ கோயிலான தர்மசாஸ்தா ஆலயத்தில் கடந்த சில தினங்களாக பல்வேறு பூஜைகள் செய்தும் அன்னதானம் வழங்கியும் கூட்டு பிராத்தனை செய்து வந்தனர். 


இதைத் தொடர்ந்து தற்போது கமலா ஹாரிஸ் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதை கொண்டாடும் வகையில் அப்பகுதி மக்கள் தங்கள் வீட்டு வாசலில் வண்ண கோலமிட்டு வாழ்த்து தெரிவித்தனர். மேலும் குலதெய்வ ஆலயத்தில் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் பைங்காநாடு துளசேந்திரபுரம் கிராம மக்கள் கொண்டாடி வருகின்றனர்.