சிரியாவிலுள்ள ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க கூட்டுப்படைகள் இறுதிக் கட்ட சண்டையை தீவிரப்படுத்தியுள்ளன.
சர்வதேச நாடுகளின் கூட்டு முயற்சியை அடுத்து, ஈராக் மற்றும் சிரியாவில் தற்போது ஐஎஸ் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் ஒரு சதவிகிதம் அளவுக்கே இருப்பதாக கூறப்படுகிறது. எனினும் ஆப்கானிஸ்தான், லிபியா, சினாய் மற்றும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் அவர்களது ஆதிக்கம் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால் ஐஎஸ் பயங்கரவாதிகள் முற்றிலும் ஒழிக்கப்பட்ட செய்தி விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சிரியாவின் டெர் அல் சோர் மாகாணத்தில் ஐஎஸ் வசம் இருக்கும் கடைசி பகுதியையும் மீட்பதற்கான நடவடிக்கைகளை அமெரிக்கா முன்னெடுத்துள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் போர் விமானங்கள் மூலம் தொடர் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கெனவே முன்னெச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டதால், அங்கிருந்து திரளான மக்கள் லாரிகளிலும், கார்களிலும் பாதுகாப்பான இடங்களுக்கு புலம் பெயர்ந்து வருகின்றனர்.
இந்தச் சுழலில் 7 குழந்தைகள் உள்பட 16 பேர் தாக்குதலில் உயிரிழந்திருப்பதாக பிரிட்டனைச் சேர்ந்த சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள அமெரிக்க கூட்டுப் படைகள் பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படவில்லை எனக் கூறியுள்ளது. மேலும் சிரிய அரசின் கணக்கெடுப்பின்படி டெர் அல் சோர் மாகாணத்தில் இன்னும் 600 ஐஎஸ் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாகவும், அவர்களில் பெரும்பாலானவர்கள் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.