உலகம்

சீனாவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா

சீனாவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா

JustinDurai

உக்ரைனில் போர் நடத்துவதற்கு தேவையான ஆயுதங்களை தந்து உதவுமாறு சீனாவிற்கு ரஷ்யா கோரிக்கை வைத்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

உக்ரைனில் போரை தீவிரப்படுத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளதாகவும் இதற்காக ஆயுதம் உள்ளிட்ட உதவிகளையும் பொருளாதார உதவிகளையும் கடந்த சில நாட்களாகவே சீனாவிடம் அந்நாடு கோரி வருவதாகவும் அமெரிக்க அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சூழலில் பேசிய அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜாக் சுல்லிவன், ரஷ்யாவுக்கு உதவி செய்தால் அந்நாட்டை போல் சீனாவுக்கும் பொருளாதார தடைகள் விதிக்க நேரிடும் என எச்சரித்துள்ளார்.

மேலும் ரஷ்யா கூறும் தவறான தகவல்களை சீனாவும் பரப்பி வருவதாக அமெரிக்கா கவலை குற்றஞ்சாட்டியுள்ளது. உக்ரைனில் ரசாயன அல்லது உயிரியல் ஆயுத தொழிற்சாலை இருப்பதாகவும் அது அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் ரஷ்யா கூறியிருந்த நிலையில் அதை சீனா ஆமோதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை பல நாடுகள் கண்டித்த நிலையில் சீனா அது தொடர்பாக நேரடியாக கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. எனினும் நேட்டோ அமைப்பை விஸ்தரிக்கும் திட்டமே பிரச்னைகளுக்கு காரணம் என்றும் சீனா தெரிவித்திருந்தது

இதையும் படிக்க: செர்னோபில் அணுமின் நிலையத்தை மீட்டுவிட்டோம் - உக்ரைன் அரசு