உலகம்

அதிக பிளாஸ்டிக் கழிவுகள் உற்பத்தி... அமெரிக்கா, பிரிட்டன் முதலிடம்

webteam

உலக அளவில் அதிக அளவிலான பிளாஸ்டிக் மாசுக்களை ஏற்படுத்தும் மக்கள் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று புதிய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. அமெரிக்காவில்தான் பெரும்பாலான பிளாஸ்டிக் கழிவுகள் உற்பத்தியாகின்றன. அதேபோல கடலில் பிளாஸ்டிக் மாசுக்களை ஏற்படுத்துவதில் அமெரிக்கர்கள் மூன்றாவது இடத்தில் உள்ளனர்.

கடந்த ஆண்டுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் ஆசிய நாடுகளே கடற்பகுதியில் பிளாஸ்டிக் மாசுக்களை ஏற்படுத்துவதில் முன்னணி்யில் இருந்தன. அதில் அமெரிக்கா 20 வது இடத்தில் இருந்தது. தற்போது அங்கு மறுசுழற்சி செய்வதற்காக சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக்கில் பாதிக்கும் மேற்பட்டவை வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டதாக 2016 ஆம் ஆண்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

"உலக மக்கள்தொகையில் அமெரிக்கா 4 சதவீதம். ஆனால் பிளாஸ்டிக் கழிவுகளில் 17 சதவீதம். சர்வதேச பிளாஸ்டிக் மாசு பிரச்னையைத் தீர்ப்பதில் அமெரிக்கா முக்கிய பங்கு வகிக்கவேண்டும்" என்கிறார் சுற்றுச்சூழல் ஆய்வாளர் நிக் மல்லாஸ்.

அமெரிக்காவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பிளாஸ்டிக் கழிவுகள், சர்வதேச கடல் பிளாஸ்டிக் மாசு பிரச்னைக்குக் காரணமாக இருக்கின்றன. பிளாஸ்டிக் மாசு பற்றிய ஆய்வு முடிவுகள் சமீபத்தில் சர்வதேச அறிவியல் ஆய்வு இதழில் வெளியிடப்பட்டுள்ளன.

2016 ஆய்வின்படி 34 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவுகளை அமெரிக்கா உற்பத்தி செய்கிறது. தற்போது அந்த அளவு 42 மில்லியன் டன்னாக உயர்ந்திருக்கிறது.