உலகம்

அரிதான நோயால் கல்லாக மாறிவரும் இரட்டையர்கள்

webteam

அயர்லாந்தின் வடக்குப் பகுதியில் குடியிருந்துவரும் இரட்டை சகோதரிகள் ஒருவகை அரிதான நோயினால் பாதிக்கப்பட்டு சிறுகச் சிறுக கல்லாக உருமாறி வருகின்றனர்.

வட அயர்லாந்தின் ஆண்ட்ரிம் கவுண்டி பகுதியில் வசித்துவரும் இரட்டையர்கள் ஜோ பக்ஸ்டன் மற்றும் லூசி ஃபெட்வெல். இருவருக்கும் 26 வயதாகிறது. இவர்களுக்கு Fibrodysplasia Ossificans Progressiva (FOP) எனப்படும் அரிய நோய் தாக்கியுள்ளது. தசை திசு, தசைநார்கள் மற்றும் தசைநாண்கள், எலும்புகள் இறுக்கமடைந்து, உடல் அசைக்கக் கூட முடியாத அளவிற்கு கல் போன்று மாறிவருகிறது. உலகில் இதுவரை 800 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோயை FOP என்ற குறியீட்டுச் சொல்லால் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஜோ பக்ஸ்டன் மற்றும் லூசி ஃபெட்வெல் இருவரும் 8 வயது இருக்கும்போது FOP பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. ஜோ பக்ஸ்டனுக்கு ஐந்து வயது இருக்கும்போது சோபாவில் இருந்து விழுந்ததில் அவர் முழங்கை உடைந்துவிட்டது. அவர் அதற்கான சிகிச்சை எடுத்து கொண்டுள்ளார். ஆனால் பலன் எதுவும் தரவில்லை. அதன்பின் 8 வயதில் இருவருக்கும் கால் விரல்களில் கட்டி ஒன்று வளர்ந்துள்ளது. ஆனால் மருத்துவர்கள் இந்த கட்டி ஒன்றும் பெரிய விஷயமல்ல; நாளடைவில் குணமாகும் என கூறியுள்ளனர்.

ஜோ மட்டுமல்ல அவரது சகோதரி லூசி கூட, தமது 8-வது வயதில் இதேப்போன்ற ஒரு விபத்தினால் பாதிக்கப்பட்டுள்ளார். ஜோ பக்ஸ்டன் திருமணமானவர். ஜோ, லூசி சகோதரிகளுக்கு தற்போது உடலின் குறிப்பிட்ட எந்த பாகத்தையும் அசைக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஜோ தமது கணவருடன் குடும்பம் நடத்த மிகவும் ஆவலுடன் இருக்கிறார். ஆனால் தமது குழந்தைகளுக்கும் இதே நோய் பரவும் ஆபத்து இருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். தற்போது இருவரும் லண்டனில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இருவரும் இந்த நோயில் இருந்து விடுபட்டு வருவோம் என்ற நம்பிக்கையை தெரிவிக்கின்றனர்.