உலகம்

வானவில் மலை : மலையே வானவில்லாக காட்சி தரும் அதிசயம்

வானவில் மலை : மலையே வானவில்லாக காட்சி தரும் அதிசயம்

webteam

பார்த்தவுடன் மனதைப் பறிகொடுக்கும் அளவுக்கு பல நிறங்களில் அழகாக காட்சியளிக்கும் பெரு நாட்டின் கஸ்கோ பகுதிக்கு அருகில் இருக்கும் வானவில் மலை.

பெரு நாட்டின் கஸ்கோ பகுதிக்கு மிக அருகில் இருக்கும் வினிகுன்கா என்ற வானவில் மலைக்கு சுற்றுலா பயணிகள் அதிகரித்துவரும் நிலையில் அங்கு நடைபெறும் சுரங்க பணிகளுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.உலகின் முக்கியமான மலைத்தொடர்களில் ஒன்று ஆண்டிஸ் மலைத்தொடர். தென் அமெரிக்க கண்டத்தில் காணப்படும் இந்த மலைத்தொடரின் ஒரு பகுதியில்தான் இந்த வானவில் வண்ண மலைத்தொடர்கள் காணப்படுகின்றன. பெருவின் அசுங்கேட் மலைப்பகுதியில் இவை அமைந்துள்ளது. 

2013 வரை மற்ற மலைகளைப் போலத்தான் இதுவும் காணப்பட்டது. அதுவரை இதன்மேல் பனி படர்ந்தது இருந்ததாக அங்குள்ள உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர். மொத்தமாகப் பனி உருகியதாலும், வின்சுனாகா மலையில் இருக்கும் பல்வேறு விதமான தாதுக்களில் மழை நீர் விழும்போது, அவை வண்ணமயமாக மாறுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த அதிசய மலைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வந்ததால் மலையின் அருகே வசித்த கிராம மக்கள் சுற்றுலா வழிகாட்டிகளாக மாறினர். இதனால் அப்பகுதியின் பொருளாதாரம் குறுகிய காலத்திலேயே உயர்ந்துள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்ளுர்வாசிகள் தங்களது வேலையை விட்டுவிட்டு சுற்றுலா வழிகாட்டியாக மாறிவிட்டனர். மேலும் மலைக்கு அருகே பல்வேறு சிறு கடைகள் போன்றவற்றால் கிராம மக்களின் வருவாய் மலைப்போல் அதிகரித்துள்ளது.

வண்ணமயமான வானவில் மலையில் இருக்கும் இயற்கை அதிசயங்கள் சுற்றுலா பயணிகளை ஈர்த்ததுபோல் அங்கிருக்கும் தாதுக்கள் பல சுரங்க நிறுவனங்களையும் ஈர்த்தது. கனடாவை சேர்ந்த Camino mineral corp என்ற நிறுவனம் தாதுகளுக்கு வலைவீசி சுரங்கத்தை ஏற்படுத்தியது. இந்த நடவடிக்கையால் இயற்கை அதிசயம் அழிந்துபோக வாய்ப்பிருப்பதாலும், வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாலும் அப்பகுதியில் சுரங்கப் பணியாளர்களுக்கும், உள்ளூர் மக்களுக்கும் இடையே அடிக்கடி சண்டை நடந்துவந்தது. 

இதையடுத்து தற்போது வானவில் மலையை சுற்றி நடைபெறும் சுரங்க பணிகளுக்கு தடை விதித்து அங்குள்ள சுரங்கங்களை 1 ஆண்டுகளுக்குள் மூடும்படி அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.இந்த உத்தரவால் இயற்கையும், வாழ்வாதாரமும் மீட்டெடுக்கப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு அடைந்துள்ளனர்.